கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை அடுத்த போத்தன்கோடு மஞ்ஞமலை பகுதியைச் சேர்ந்தவர் ஷஜி. இவருக்கு சுரிதா (33) என்ற மனைவியும், ஸ்ரீராஜ் மற்றும் பிறந்த 36 நாள்களேயான ஸ்ரீதேவ் என 2 மகன்களும் இருந்தனர். குழந்தை பிறப்புக்குப் பிந்தைய கவனிப்புக்காக தாய் வீட்டில் வசித்து வந்தார் சுரிதா. சுரிதாவின் கணவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று அதிகாலைமுதல் குழந்தையைக் காணவில்லை என ஷஜி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றின் மதில் சுவரில் குழந்தை பயன்படுத்திய டவல் கிடந்ததை சுரிதா போலீஸாருக்கு அடையாளம் காட்டியுள்ளார். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் தேடிப் பார்த்தபோது, குழந்தையின் உடல் கிடைத்தது. பிறந்து 36 நாள்களேயான குழந்தை தன்னிச்சையாக எங்கும் செல்ல வாய்ப்பு இல்லை.

எனவே முதலில் தாய் சுரிதாவிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததைத் தொடர்ந்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், `பிறந்த சமயத்திலேயே குழந்தைக்கு நோய் இருந்தது. கணவருக்குச் சொந்தமாக வீடு இல்லை, நிறைய கடன் உண்டு. எனவே மூத்த மகன் மட்டும் போதும் என முடிவு செய்தேன். அதைத் தொடர்ந்து பல நாள்கள் திட்டமிட்டு, குழந்தையைக் கிணற்றில் வீசிக் கொலைசெய்தேன்’ என சுரிதா ஒப்புக்கொண்டுள்ளார்.
இது குறித்து போலீஸார் பேசுகையில், “இரண்டு மகன்களும் தாய் சுரிதா அருகே கட்டிலில் தூங்கியுள்ளன. சுரிதாவின் தாய் கிரிஜா அதே அறையில் தரையில் தூங்கி உள்ளார். நள்ளிரவு குழந்தை அழுததும் பால் கொடுக்கும்படி கூறிவிட்டு, கிரிஜா மீண்டும் தூங்கியுள்ளார். இதற்கிடையே சுரிதா வீட்டுக்குப் பின்பக்கம் குழந்தையை எடுத்துச் சென்று 12 அடி ஆழத்துக்குத் தண்ணீர் கிடந்த கிணற்றில் குழந்தையை வீசியுள்ளார். அதிகாலை இரண்டு மணியளவில் தாய் கிரிஜாவை எழுப்பிய சுரிதா, குழந்தையைக் காணவில்லை என கதறி அழுது நாடகம் ஆடியுள்ளார்.

அவர்களது அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடினர். சுரிதாவின் கணவர் ஷஜிக்கும் தகவல் கொடுத்திருக்கிறார்கள். அதன் பின்னர் எங்களுக்கு புகார் வந்தது. அதனடிப்படையில் விசாரணை நடத்தி குழந்தையைக் கொலைசெய்ததாக தாய் சுரிதாவைக் கைதுசெய்துள்ளோம்” என்றனர். இதற்கிடையே குழந்தையின் போஸ்ட்மார்ட்டம் முடிந்த பிறகு இறுதியாக ஒருமுறை மகனின் முகத்தைப் பார்க்க வேண்டுமா என சுரிதாவிடம் போலீஸார் கேட்டுள்ளனர். அதற்கு, “நான் குழந்தையைக் கொலைசெய்தது கணவருக்கும், ஊரில் உள்ளவர்களுக்கும் தெரியும் என்றால், பார்க்க விரும்பவில்லை. தெரியாது என்றால் பார்க்கலாம்” எனச் சொல்லியிருக்கிறார்.