புதுடெல்லி: டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்று முன்தினம் நடந்த வெடிச்சத்தம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நேற்று விசாரணையை தொடங்கியது.
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்று முன்தினம் வெடிச்சத்தம் கேட்டதாக டெல்லி போலீஸாருக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு டெல்லி போலீஸார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இஸ்ரேல் தூதருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. சர் அல்லா ரெசிஸ்டன்ஸ் என்ற அமைப்பின் பெயரில் இந்த கடிதம் எழுதப்பட்டிருந்தது.
இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), டெல்லி சிறப்பு பிரிவு போலீஸார், மோப்ப நாய் படைப் பிரிவினர் ஆகியோர் டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்று தங்கள் ஆய்வை தொடர்ந்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், வெடிச்சத்தம் கேட்டதாக கூறப்பட்ட நேரத்தில் இருவர் இஸ்ரேல் தூரதகம் அருகே சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. வெடிச் சத்தம் கேட்டதாக போன் அழைப்பு வந்ததற்கும், இவர்களுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை. விசாரணைக்கு பின்பே இச்சம்பவத்தில் நடந்த விஷயங்கள் தெரியவரும்.
இஸ்ரேல் தூதரக செய்தி தொடர்பாளர் கைநிர் கூறுகையில் ‘‘நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் வெடிச்சத்தம் கேட்டது. ஆனால், அது என்னவென்று தெரியவில்லை. இதுகுறித்து போலீஸாரும், எங்கள் பாதுகாப்புப் படையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விசாரணையில் இந்தியா மற்றும் இஸ்ரேல் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் செயல்படுகின்றனர்’’ என்றார்.