2023-ம் ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் ஒரு பவுன் ( 8 கிராம்) விலை ரூ.42,000-த்தை தாண்டிவிடும் என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், தற்போது ரூ.47,500-ஐ தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் எகிறிக்கொண்டிருந்த தங்கம் விலை, ஜூலை மாதத்திலிருந்து படிப்படியாக குறைந்தது. ஆனால் அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல்-பாலஸ்தீன போரால் மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. இந்த போர் தொடங்கிய நாளான அக்டோபர் 7-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.5,305-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.42,440-க்கும் விற்பனை ஆனது.

நேற்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.5,900 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.47,200 ஆகவும் விற்பனை ஆனது. இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.5,945 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.47,560 ஆகவும் விற்பனை ஆகி வருகிறது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.81.00-க்கு விற்பனை ஆகிறது.
தங்கம் விலை உயர்வு குறித்து, “உலகில் நடந்து வரும் போர்கள், அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளில் உள்ள பொருளாதார தேக்க நிலை, பிற நாடுகளில் உள்ள பொருளாதார வீழ்ச்சி ஆகிய காரணங்களால் தங்கம் விலை அதிகரித்துக்கொண்டு வருகிறது. தற்போது இருக்கும் சூழலில் தங்கம் விலை விரைவில் ரூ.50,000-த்தை தொட்டுவிடும்” என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.