பட்டா மாறுதலுக்காக விவசாயியிடம் லஞ்சம் பெற்ற பெண் வி.ஏ.ஓ, கையும் களவுமாகக் கைதுசெய்யப்பட்ட சம்பவம், உசிலம்பட்டி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிராமப் பகுதிகளில் சாமானிய மக்கள் பல்வேறு சேவைகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு செல்லும்போது, லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்ற நிலையை பல அரசுப் பணியாளர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள். அதிலும் மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் லஞ்சம் தங்கு தடையின்றி புழக்கத்தில் இருந்து வருகிறது. எப்போதாவதுதான் சம்பந்தப்பட்ட ஊழல் அலுவலர்கள் சிக்குகிறார்கள்.
அந்த வகையில் உசிலம்பட்டி அருகே உள்ள கே.போத்தம்பட்டி வி.ஏ.ஓ ரம்யா தற்போது சிக்கியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையத்தைச் சேர்ந்த முத்துபேயத்தேவர் என்பவருக்குச் சொந்தமான இடம் கே.போத்தம்பட்டியில் உள்ளது. இந்த நிலத்தை தன்னுடைய மகன் காசிமாயன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய நீண்ட நாள்கள் வி.ஏ.ஓ அலுவலகத்துக்கு அலைந்த நிலையில், பெயர் மாற்றம் செய்ய பெரிய தொகை கேட்ட வி.ஏ.ஓ ரம்யா, ரூ.9000 லஞ்சமாக தர வேண்டுமென்று கேட்டுள்ளார். அந்தளவுக்கு வசதி இல்லை என்று கூறியவரிடம், பணம் கொடுத்தால்தான் காரியம் நடக்கும் என்று உறுதியாக கூறியுள்ளார் வி.ஏ.ஓ ரம்யா.
இது குறித்து தெரிந்தவர்களிடம் ஆலோசித்த முத்துபேயத்தேவர், மதுரையிலுள்ள லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினரின் வழிகாட்டுதலின்படி ரசாயணம் தடவிய ரூ.9,000 ரொக்கத்தை பெற்ற முத்துப்பேயத்தேவர், அதை வி.ஏ.ஓ ரம்யாவிடம் இன்று கொடுக்க, அவர் மகிழ்ச்சுயாக வாங்கும்போது… அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வி.ஏ.ஓ ரம்யாவை கையும் களவுமாகப் பிடித்தனர்.
இதை சற்றும் எதிர்பார்க்காத வி.ஏ.ஓ ரம்யா கைதுசெய்யப்பட்ட நிலையில், அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. தொடர்ந்து இவர்மீது ஏகப்பட்ட புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு வந்த நிலையில், கண்காணிக்கப்பட்டுவந்து இன்று கையும் களவுமாகக் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகியாகவும் செயல்பட்டு வருகிறார்.