சபரிமலை:சபரிமலையில் மண்டல பூஜையுடன் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு பெற்று நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது. மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிச.,30 மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்.
கார்த்திகை முதல் தேதி தொடங்கிய மண்டல காலத்தின் நிறைவாக நேற்று காலை 10:30 மணி முதல் 11:30 மணிக்குள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு ஐயப்பனுக்கு கலசாபிஷேகம், களபாபிஷேகம் நடத்தினார். பின்னர் தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜை நடத்தி மண்டல பூஜையை நிறைவு செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6:30க்கு தீபாராதனை, புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு 9:00 மணிக்கு அத்தாழ பூஜை நிறைவு பெற்று 10:00 மணிக்கு ஹரிவராசனம் பாடி மூலவரை திருநீறால் மூடி யோக நிலையில் அமர்த்திய பின்னர் நடை அடைக்கப்பட்டது.
மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிச.,30 மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது. டி.,31 அதிகாலை 3:30 மணி முதல் நெய் அபிஷேகம் நடைபெறும். ஜன.,15-ல் மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. ஜன.20 வரை நடை திறந்திருக்கும். ஜன.21 காலை 7:00 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் நடை அடைக்கப்படும்.
வருமானம் அதிகரிப்பு:
சபரிமலை வருமானம் கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது என்று நேற்று முன்தினம் தெரிவித்திருந்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு நேற்று திடீரென 18.72 கோடி ரூபாய் வருமானம் அதிகரித்ததாக தெரிவித்துள்ளது. குத்தகை ஏல வருமானத்தையும் சேர்த்து இந்த மண்டல காலத்துக்கான மொத்த வருமானம் 241 கோடியே 72 லட்சத்தி 22 ஆயிரத்து 711 ரூபாய்.
இது கடந்த ஆண்டு 222 கோடியே 98 லட்சத்து 70 ஆயிரத்து 250 ரூபாயாக இருந்தது.
இதன்படி 18.72 கோடி அதிகரித்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி. எஸ். பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement