புதுடில்லி கொரோனா தொற்றின் புதிய வகையான, ஜே.என்.1 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 109 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில், கடந்த சில நாட்களாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஒமைக்ரான் தொற்றின் புதிய வகையான, ஜே.என்.1 தொற்றே இந்த பரவலுக்கு காரணம் என, கண்டறியப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கடந்த 26ம் தேதி நிலவரப்படி, நாடு முழுதும் ஜே.என்.1 வகை தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 109 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக, குஜராத்தில் 36; கர்நாடகாவில் 34; மஹாராஷ்டிராவில் ஒன்பது; கேரளாவில் ஆறு; தமிழகம் மற்றும் ராஜஸ்தானில் தலா நான்கு; தெலுங்கானாவில் இரண்டு பேர் இவ்வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஜே.என்.1 தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்தாலும், பொது மக்கள் அச்சமடைய வேண்டாம்.
ஏனெனில், பாதிக்கப்பட்டோரில் 92 சதவீதம் பேர், வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இணை நோய் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொரோனா பரிசோதனையை அனைத்து மாநில அரசுகளும் அதிகரிக்க வேண்டும். மேலும், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
500ஐ கடந்தது தினசரி பாதிப்பு!
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட மருத்துவ அறிக்கையின்படி, நாட்டில் முந்தைய 24 மணி நேரத்தில், 529 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருவரும், குஜராத்தில் ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். புதிய வகை கொரோனா, குளிர் காலம் ஆகியவற்றால், கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்