புதுடில்லி,கடுமையான பனிப்பொழிவு காரணமாக,புதுடில்லியில் நேற்று காலை சுற்றுப்புறமே தெரியாத அளவுக்கு பனி படர்ந்ததால், 110 விமானங்கள், 25 ரயில்சேவைகள் தாமதமாகின.
குளிர்காலம் துவங்கிவிட்டதால் வடமாநிலங்களில் கடும் பனிப் பொழிவு நிலவுகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுஉள்ளது.
புதுடில்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக அடர்த்தியான பனிப்பொழிவு நிலவுகிறது.
பனி மூட்டத்தால் சாலை, ரயில், விமானப் போக்குவரத்து அனைத்தும் பாதிக்கப்பட்டுஉள்ளன.
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா — லக்னோ விரைவுச் சாலையில் அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக, பல வாகனங்கள் நேற்று ஒன்றோடு ஒன்று மோதின.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்; 12 பேர் காயமடைந்தனர்.
புதுடில்லியில் நிலவும் அடர் பனிமூட்டத்தால் வானிலை மையம், ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று அதிகாலை வெப்பநிலை ஏழு டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு சரிந்தது. பகலில் 24 டிகிரி செல்ஷியஸ் வரை உயர்ந்தது.
புதுடில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள சப்தர்ஜங் பகுதியில் நேற்று காலை நிலவிய கடும் பனிப்பொழிவால், 75 அடி தொலைவுக்கு அப்பால் உள்ள எதுவும் பார்வைக்கு புலப்படவில்லை.
இதனால், 110 விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை காலதாமதமாகி ஆயிரக்கணக்கான பயணியர் தவித்தனர்.
இதே போல் டில்லி வந்து சேர வேண்டிய 25 ரயில்களும் தாமதமாக வந்தன.
‘ஆக்ராவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நினைவுச்சின்னமான தாஜ் மஹாலை காணோம்’ என, சுற்றுலா பயணியர் தேடும் அளவுக்கு நிலைமை மோசம் அடைந்தது. இதனால், சுற்றுலா பயணியர் அவதிக்குள்ளாயினர்.
டில்லியில் கடந்த சில வாரங்களாக காற்றின் தரம் மேம்பட்டிருந்த நிலையில், பனிமூட்டத்தால் தற்போது காற்றின் தர குறியீடு 400 புள்ளிகளுக்கு கீழ் சரிந்து மிக மோசமான அளவை எட்டி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்