Vijayakanth: “என் வாழ்க்கை முழுக்க விஜயகாந்த் சாருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கேன்" – லிவிங்ஸ்டன்

“நடிக்கணும்னு ஆசைப்பட்டு நிறைய முயற்சிகள் பண்ணிட்டிருந்தேன். ஆனா, வாய்ப்பு கிடைக்கலை. சரி, டைரக்‌ஷன் கத்துக்கலாம்னு நினைச்சு பாக்யராஜ் சார்கிட்ட சேர்ந்தேன். அதன்பிறகு, கவனம் முழுக்க நடிப்புல இருந்து விலகி கதை, திரைக்கதைன்னு போயிடுச்சு. பாக்யராஜ் சார் படங்கள்ல ஏதாவது சின்னச்சின்ன கேரக்டர் இருந்தா ‘இதை நீயே பண்ணுய்யா’ன்னு சொல்லுவார். அப்படித்தான் ரெண்டு, மூணு படங்கள்ல வருவேன்.

ஆனா, நடிகனா நான் முதல்ல கமிட்டானது ‘பூந்தோட்ட காவல்காரன்’ படத்துலதான். முதல் நாளைவிட அந்தப் படத்துக்குள்ள நான் வந்தது ரொம்ப சுவாரஸ்யம். விஜயகாந்த் சாருக்குக் கதை சொல்ல அவர் ஆபீஸுக்குப் போனேன். அவர்கூட நிறைய பேர் உட்கார்ந்து கதை கேட்பாங்க. எனக்கு உட்கார்ந்து கதை சொல்ல வராது. நின்னுகிட்டே ரொம்ப ரசிச்சு நடிச்சு கதை சொல்லி முடிச்சேன். “ரொம்ப நல்லாருக்கு, ரெண்டு நாள் கழிச்சு மறுபடியும் வந்து கதை சொல்லுங்க”ன்னு சொன்னார் விஜயகாந்த் சார். அப்போ கதை சொல்லப்போகும்போது அவர் கூட வேற சிலர் இருந்தாங்க. அதேமாதிரி சொல்லி முடிச்சேன். ‘‘கதை பிடிச்சிருக்கு. நாம பண்ணுவோம். அதுக்கு முன்னாடி, ‘பூந்தோட்ட காவல்காரன்’னு ஒரு படம் தயாரிக்கிறோம். அதுல வில்லன் கேரக்டர் இருக்கு. பண்றீங்களா?”ன்னு விஜயகாந்த் சார் கேட்டார்.

லிவிங்ஸ்டன்

‘இவங்க என் கதையை ரசிக்கலை, நான் கதை சொல்ற விதத்தைத்தான் கவனிச்சிருக்காங்க’ன்னு அப்போதான் தெரிஞ்சது. ‘கதை சொல்லப்போன இடத்துல நடிக்கிற வாய்ப்பா?’ன்னு குழப்பமா இருந்தது. “விஜயகாந்த் சார் படத்துல, அதுவும் வில்லனா நடிக்கிறது ரொம்பப் பெரிய வாய்ப்பு. நடி”ன்னு நண்பர்கள் சொன்னாங்க. மறுநாள் போய் ‘நடிக்கிறேன் சார்’னு சொன்னதும், கையில 10,000 ரூபாயை அட்வான்ஸா கொடுத்தார். தினமும் என் அம்மாகிட்ட பஸ்ஸுக்கு 10 ரூபாய் வாங்கிட்டு வருவேன். சில நாள்கள் அதுல ஏதாவது வாங்கிச் சாப்பிட்டுட்டா அல்லது தம் அடிச்சுட்டா திரும்பி வீட்டுக்குப் போகும்போது நடந்தே போவேன். ஆனா, இப்போ என் கையில 10,000 ரூபாய். அம்மாகிட்ட கொடுத்ததும் ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க.

இப்போ முதல் நாளுக்கு வர்றேன். முதல் நாள் தூக்கமே வரலை. ஏவிஎம் ஸ்டூடியோவுல ஷூட்டிங். விஜயகாந்த் சார், ராதிகா மேடம், நம்பியார் சார்னு எல்லோருமே ரொம்ப சீனியர். அவங்க கீழே நிக்கிறாங்க. நான் மேல இருந்து படியில கீழ இறங்கி ‘அந்தோணி, என்னை நடிக்க வெச்சதுக்கு ரொம்ப நன்றி’ன்னு சொல்லணும். பயத்துல வயிறு கலக்கிடுச்சு. ரொம்பப் பதற்றமா இருந்தேன். ‘பயப்படக்கூடாது’ன்னு நம்பியார் சார் சொன்னதும் இன்னும் பயமாகிடுச்சு. நல்லவேளை, ஒரே டேக்ல ஓகே ஆகிடுச்சு. என் வாழ்க்கை முழுக்க விஜயகாந்த் சாருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கேன். என்னை உதவி இயக்குநரா சேர்த்துக்கிட்ட பாக்யராஜ் சார், நடிகனாக்குன விஜயகாந்த் சார், ஹீரோவாக்குன ஆர்.பி.செளத்ரி சார் இவங்க மூணு பேரும் இல்லைன்னா, நான் இல்லை.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.