
பிரியங்கா சோப்ரா பெயரை சொல்லி வாய்ப்பு தேட மாட்டேன்: மீரா சோப்ரா சொல்கிறார்
பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ரா, பரிணிதி சோப்ரா ஆகியோரின் நெருங்கிய உறவினர் மீரா சோப்ரா. எஸ்.ஜே.சூர்யாவின் 'அன்பே ஆருயிரே' படம் மூலம் நிலா என்ற பெயரில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, ஜாம்பவான், லீ, மருதமலை, காளை உட்பட சில படங்களில் நடித்தார். பின்னர் தமிழில் போதிய வாய்ப்புகள் இன்றி பாலிவுட்டுக்கு சென்று மீரா சோப்ரா என்ற தனது உண்மையான பெயரில் நடித்து வருகிறார். ஆனாலும் அங்கும் ஒரு சில படங்களில்தான் நடித்துள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது “ஹிந்தி சினிமா துறையில் கடந்த 9 வருடங்களாக இருக்கிறேன். ஆனால் எண்ணி நான்கு படங்கள் மட்டுமே நடித்திருக்கிறேன். எனக்கு இன்னும் பல கதாபாத்திரங்கள் கிடைக்க வேண்டும். நான் நடித்த 'சாபத்' படத்தில் என்னால் என்ன செய்ய முடியும் என்பதைக் காண்பித்தேன். அதுபோன்ற கதைகள் எனக்குக் கிடைக்க வேண்டும்.
எனது உறவினர்கள் பிரியங்கா சோப்ரா, பரிணிதி சோப்ரா முன்னணி நடிகைகளாக இருக்கிறார்கள். அதற்காக தொழில்ரீதியாக எங்களின் குடும்ப தொடர்பை ஒரு போதும் பயன்படுத்தக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். அது நான் எடுத்த முடிவு. அதற்காக, 'இவர் என் சகோதரி, இவருக்கு வாய்ப்புக் கொடுங்கள்' என்று அவர்களும் சொல்வதில்லை. அதை நான் விரும்பவும் இல்லை” என்கிறார்.