புதுடில்லி,
நாடு முழுதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இருந்து, உபயோகமற்ற பொருட்கள் அகற்றப்பட்டு விற்கப்பட்டதன் வாயிலாக 2021 அக்டோபர் முதல் இதுவரை, 1,163 கோடி ரூபாய் வருவாயை, மத்திய அரசு ஈட்டி உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு, ‘துாய்மை இந்தியா’ திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
‘சந்திரயான் – 3’
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள தேவையற்ற கோப்புகள், உபகரணங்கள், பயன்பாடற்ற வாகனங்கள் உள்ளிட்ட உபயோகத்தில் இல்லாத பொருட்களை அகற்றி விற்பனை செய்து, வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டது.
இதை செயல்படுத்தும் விதமாக, மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்க்கும் துறை சார்பில், நாடு முழுதும் சிறப்பு இயக்கங்கள் நடத்தப்பட்டன.
அதன்படி, அரசு அலுவலகங்களில் இடங்களை அடைத்துக் கொண்டிருந்த கோப்புகள், பயன்பாடற்ற உபகரணங்கள், காலாவதியான வாகனங்கள் அகற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
இப்படி, ௨௦௨௧ அக்டோபர் முதல் தற்போது வரை, மத்திய அரசு அலுவலகங்களில் பயனற்ற பொருட்கள் அகற்றப்பட்டதன் வாயிலாக, 1,163 கோடி ரூபாயை, மத்திய அரசு வருவாயாக ஈட்டியுள்ளது.
இத்தொகை, இஸ்ரோவின், ‘சந்திரயான் – 3’ திட்டத்துக்கு செலவிட்ட தொகையை விட அதிகம்.
சந்திரயான் – 3 திட்டத்துக்கு, 600 கோடி ரூபாய் செலவிடப்பட்ட நிலையில், உபயோகமற்ற பொருட்களில் இருந்து மட்டுமே, மத்திய அரசுக்கு, 1,163 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துஉள்ளது.
இதில், கடந்த அக்டோபர் மாதம் நடந்த சிறப்பு இயக்கம் வாயிலாக மட்டும், 557 கோடி ரூபாய் வருமானம் திரட்டப்பட்டு உள்ளது.
96 லட்சம் கோப்பு
அத்துடன், அரசு அலுவலகங்களில் இருந்து, 96 லட்சம் கோப்புகள் அகற்றப்பட்டதுடன், 355 லட்சம் சதுர அடி இடமும் மீட்டெடுக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டில் மட்டும், அலுவலக பொருட்கள் அகற்றம் வாயிலாக, மத்திய அரசுக்கு, 557 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
அதில் ரயில்வே அமைச்சகத்தின் பங்கு, 225 கோடி ரூபாய்; ராணுவ அமைச்சகம், 168 கோடி; பெட்ரோலிய அமைச்சகம் 56 கோடி மற்றும் நிலக்கரி அமைச்சகத்தின் பங்கு, 34 கோடி ரூபாயாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்