சித்ரதுர்கா, கர்நாடகாவின் சித்ரதுர்காவில், பாழடைந்த வீட்டுக்குள் குடும்பத்தோடு தற்கொலை செய்த ஐந்து பேரின் எலும்புக்கூடுகள் கிடைத்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா நகரின், தொட்ட சித்தப்பனஹள்ளியில், செல்லகெரே கேட் அருகில் வசித்தவர் ஜெகன்னாத் ரெட்டி, 70; பொதுப்பணித் துறையில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பிரேமாவதி, 60.
துர்நாற்றம்
தம்பதிக்கு திரிவேணி, 42, என்ற மகளும், கிருஷ்ணா ரெட்டி, 40, நரேந்திர ரெட்டி, 38, ஆகிய மகன்களும் இருந்தனர். இந்த மூவருக்கும் திருமணம் ஆகவில்லை.
இவர்களின் மூத்த மகன் மஞ்சுநாத ரெட்டி, பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
ஜெகன்னாத் ரெட்டியின் குடும்பத்தினர், அக்கம், பக்கத்தினருடன் அவ்வளவாக பேசுவதில்லை. உறவினர்களுடனும் ஒட்டுதல் இல்லாததால், இவர்களின் வீட்டுக்கு யாரும் வருவதில்லை.
கடந்த 2019ல் இருந்தே, இவர்களின் வீட்டுக்கதவு திறக்கப்படவே இல்லை. சில ஆண்டுகளாகவே, இந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
எலி இறந்திருக்கலாம் என, அக்கம் பக்கத்தினர் நினைத்தனர். சில நாட்கள் துர்நாற்றம் வீசும், அதன்பின் நின்று விடும். எனவே, யாரும் இதை பொருட்படுத்தவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 11:00 மணியளவில், ஜெகன்னாத் ரெட்டியின் வீட்டுக்குள் இருந்து, அதிகமான அளவில் துர்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்த அப்பகுதியினர், சித்ரதுர்கா போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ஐந்து எலும்பு கூடுகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பினர்.
எஸ்.பி., தர்மேந்திரா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
வீட்டை சோதனையிட்ட போது, 2019ல் குடும்பத்தினர் எழுதி வைத்துள்ள கடிதம் கிடைத்தது.
இதில் அவர்கள் தற்கொலை செய்து கொள்வ தாக குறிப்பிட்டுள்ளனர்.
தற்கொலை
ஜெகன்னாத் ரெட்டியின் இளைய மகன் நரேந்திர ரெட்டி, 2013ல் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியில் அமர்ந்தார். இவர் நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடிப்பதில் ஈடுபட்டார்.
பிடதி அருகில் காரை வழிமறித்து கொள்ளையடித்த வழக்கில், இவர் கைதாகி சிறை தண்டனை அனுபவித்தார். இதனால் மனம் நொந்த குடும்பத்தினர், தற்கொலை செய்து கொண்டது தெரியவந்து உள்ளது.
சித்ரதுர்கா போலீசார் விசாரணை நடத்துகின்றனர். அந்த எலும்பு கூடுகள் யாருடையது என அடையாளம் காண, தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்