புதுடில்லி, மும்பை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட, பயங்கரவாதி ஹபீஸ் சயீதை ஒப்படைக்கும்படி, பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை விடுத்து உள்ளது.
மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில், 2008 நவ., 26ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்; இதில், 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு, நம் அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி ஹபீஸ் சயீது, 71, மூளையாகச் செயல்பட்டது தெரிய வந்தது. அவரை கைது செய்ய, நீண்ட காலமாக மத்திய அரசு போராடி வருகிறது.
பயங்கரவாதி ஹபீஸ் சயீது குறித்து தகவல் கொடுப்போருக்கு, அமெரிக்கா சார்பில், 83 கோடி ரூபாய் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்ததாக தொடரப்பட்ட வழக்குகளில், ஹபீஸ் சயீதுக்கு, பாக்., நீதிமன்றம், 2022 ஏப்ரலில், 33 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
இவர், கடந்த காலங்களிலும் இது போன்ற வழக்குகளில், சிறை தண்டனை பெற்றுள்ளார். எனினும், பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றித் திரிந்து, இந்தியாவுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீதை ஒப்படைக்கும்படி, பாகிஸ்தானிடம் இந்தியா மீண்டும் கோரிக்கை விடுத்துஉள்ளது.
இந்தத் தகவலை, வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று உறுதிப்படுத்தினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்