அயோத்தியில் மீரா மாஞ்சி வீட்டுக்குச் சென்று தேநீர் அருந்திய பிரதமர் மோடி – யார் இந்தப் பெண்?

அயோத்தி: அயோத்தி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு மீரா மாஞ்சி என்பவரின் வீட்டுக்குச் சென்றார். அங்கே அவரது வீட்டில் தேநீர் அருந்தி மீரா மாஞ்சியை ஆச்சரியப்படுத்தினார். மீரா மாஞ்சி அயோத்தியில் தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள அவருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின்அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கும்பாபிஷேகம் மற்றும் அதனைத் தொடர்ந்து அயோத்திக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்பதால், அங்கு ஏற்கெனவே சிறிய அளவில் இருந்த ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் 240 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தையும், 1,450 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) திறந்து வைத்தார்.

யார் இந்த மீரா மாஞ்சி? – பிரதமர் மோடி பின்னர் மீரா மாஞ்சியின் இல்லத்துக்குச் சென்றதையும், அங்கே அவர் தேநீர் அருந்தியத வீடியோவையும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் 10 கோடியாவது பயனாளிதான் இந்த மீரா என்று குறிப்பிட்டுள்ளார்.

மீரா மாஞ்சி இது குறித்து ஊடகப் பேட்டியில், “பிரதமர் என் வீட்டுக்கு வருவார் என்பது தெரியாது. அவர் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் என்னிடம் காவல் துறையினர் அரசியல் பிரமுகர் ஒருவர் உங்கள் வீட்டுக்கு வரப்போகிறார் என்று கூறினார். அவர் வந்தபின்னர் தான் எனக்கு அந்த விஷயமே தெரிந்தது. அவர் என்னிடமும் எனது குடும்ப உறுப்பினரிடமும் பேசினார்.

உஜ்வாலா திட்டத்தால் நான் பெற்ற பலன்கள் குறித்து கேட்டறிந்தார். நான் என்ன சமைத்தேன் என்று வினவினார். நான் சாதமும், பருப்பும், காய்கறிகளும் சமைத்திருப்பதாகச் சொன்னேன். அவர் எங்கள் வீட்டில் தேநீர் அருந்தினார். தேநீரில் சர்க்கரை சற்று அதிகமாக இருப்பதாகக் கூறினார். எப்போதுமே இனிப்பு சற்று தூக்கலாக இடுவதே என் வழக்கம் என்று கூறினேன்” என்றார்.

— ANI (@ANI) December 30, 2023

பிரதமரின் உஜ்வாலா திட்டம்: நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் ‘பிரதமரின் உஜ்வாலா யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2016 மே 1-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், சிலிண்டர் பெறுவதற்கான வைப்புத் தொகை உட்பட ரூ.1,600-ஐ மத்திய அரசு வழங்குகிறது.

இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கு காஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும். மத்திய அரசின் நேரடி மானியத் திட்டத்தின் கீழ், அனைத்து வாடிக்கையாளர்களும் சந்தை விலைக்கு சிலிண்டர் வாங்க வேண்டும். பின்னர், அதற்கான மானியத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற 10 கோடியாவது பெண்தான் மீரா மாஞ்சி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.