திருநெல்வேலி: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1500 பேருக்கு நிவாரண உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழையால் பல்வேறு இடங்களை வெள்ளம் சூழ்ந்தது. தாமிரபரணி கரையோர பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களும் தனித்தீவுகளாக மாறியிருந்தன. வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
தற்போது இரு மாவட்டங்களிலும் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட வட்டாரங்களில் உள்ளவர்களுக்கு ரேஷன் அட்டை அடிப்படையில் தலா ரூ.6 ஆயிரம் மற்றும் 5 கிலோ அரிசி, மற்ற வட்டாரங்களில் உள்ளவர்களுக்கு தலா ரூ.1000 நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் நிவாரண பொருட்களையும் வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பாளையங்கோட்டை கேடிசி நகரிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் பங்கேற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கினார். நிவாரண உதவிகளை வழங்குவதற்காக இரு மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் 1,500 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
தூத்துக்குடி வெள்ளப்பெருக்கின்போது பாத்திமா நகரை சேர்ந்த ராபின் சிங் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரை போனில் தொடர்பு கொண்டு ஏற்கனவே விஜய் ஆறுதல் தெரிவித்திருந்தார். ராபின் சிங் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதியை விஜய் வழங்கினார்.
இதுபோல் வீடுகளை இழந்த வள்ளி, இசக்கி ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரம், சங்கரன் என்பவருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் வீடுகள் சேதம் அடைந்ததில் பாதிக்கப்பட்டுள்ள 30 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் ரொக்கத்தையும் விஜய் வழங்கினார்.
மேலும் 5 கிலோ அரிசி, சர்க்கரை, ரவை, கோதுமை, சேமியா, உப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் வேட்டி, சட்டை, துண்டு ஆகியவற்றை 1,500 பேருக்கு விஜய் வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு வடை, பாயாசத்துடன் விருந்தும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை முடித்து கொண்டு மண்டபத்திலிருந்து விஜய் கிளம்பியபோது புகைப்படம் எடுக்க பலர் முண்டியடித்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.