வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: ”பிரதமர் மோடி தொடர்ந்து நம்பிக்கையோடு புதிய வளர்ச்சி திட்டங்களை வழங்க உள்ளார். இதன் மூலம் இலங்கையோடு நாம் கொண்டுள்ள இருதரப்பு உறவுகளும் மேம்படும்” என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பேசினார்.
இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கை சென்று 200ம் ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதனை நினைவு கூரும் வகையில், சிறப்பு தபால் தலையை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா வெளியிட்டார். இலங்கை கவர்னர் தொண்டைமான் பெற்றுக்கொண்டார். விழாவில், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் நட்டா பேசியதாவது: பாரதத்தை சேர்ந்த தமிழர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்ததன் 200ம் ஆண்டை குறிக்கும் வகையில், தபால் தலை வெளியிடுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
200 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சிவகங்கையை சேர்ந்த மக்கள் இலங்கைக்கு எப்படி குடிபெயர்ந்தார்கள் என்பது தொடர்பாக குறும்படத்தை பார்த்தேன். தமிழர்கள் இலங்கைக்கு குடிபெயர்வதை ஆங்கிலேயர்கள் தூண்டினர். விவசாயம் சார்ந்த பணிக்காக இலங்கை வந்தனர்.
சுமார் 150 ஆண்டுகளாக மக்கள் எவ்வளவு துன்பங்களை அடைந்தனர். அந்த போராட்டம் மிகவும் வலி மிகுந்ததாகவும், உணர்ச்சிமிக்கதாகவும் இருந்தது. வாழ்க்கைத்தரம் சார்ந்த பல்வேறு துன்பங்களை அவர்கள் எதிர்கொண்டார்கள்.
பிரதமர் மோடி தொடர்ந்து நம்பிக்கையோடு புதிய வளர்ச்சி திட்டங்களை வழங்க உள்ளார். இதன் மூலம் இலங்கையோடு நாம் கொண்டுள்ள இருதரப்பு உறவுகளும் மேம்படும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இலங்கை உடனான உறவை வலுப்படுத்தி, அங்கு வாழும் தமிழர்கள் வளர்ச்சி பெற நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement