ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் புதிய அமைச்சர்களை தேர்வு செய்வதில் நீடித்த இழுபறி நேற்று முடிவுக்கு வந்தது. பா.ஜ., மூத்த தலைவர் கிரோடி லால் மீனா, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உட்பட, 12 பேர் கேபினட் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர். இதுதவிர, ௧௦ பேர் இணை அமைச்சர்களாகினர்.
ராஜஸ்தானில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ், 69 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வியை தழுவியது.
எதிர்க்கட்சியான பா.ஜ., 115 இடங்களை பிடித்து, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றியது.
யாரும் எதிர்பார்க்காத வகையில், முதன்முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வான பஜன்லால் சர்மாவை முதல்வராக, பா.ஜ., மேலிடம் தேர்வு செய்தது.
அத்துடன், துணை முதல்வர்களாக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோர் தேர்வாகினர். இவர்கள் மூவரும், கடந்த 15ம் தேதி பதவியேற்றனர்.
எனினும், பஜன்லால் சர்மா தலைமையில், புதிய அமைச்சரவையை கட்டமைக்க முடியாமல், பா.ஜ., தலைமை திணறி வருவதாக செய்தி வெளியானது.
முதல்வர் பஜன்லால் சர்மா, துணை முதல்வர்களான தியா குமாரி, பிரேம்சந்த் பைரவா ஆகியோருடன் இரண்டு முறை புதுடில்லி சென்று, பா.ஜ., தலைமையுடன் பலகட்ட ஆலோசனை நடத்தினார்.
எனினும், புதிய அமைச்சர்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதமான நிலையில், ராஜஸ்தான் அரசின் புதிய அமைச்சர்களாக பா.ஜ.,வின் மூத்த தலைவர் கிரோடி லால் மீனா, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்.
மதன் திலாவர், கஜேந்திர சிங், பாபுலால் கராடி, ஜோகராம் படேல், ராம்கஞ்ச் மண்டி, சுரேஷ் சிங் ராவத் உட்பட, 12 பேர் கேபினட் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.
ஜெய்ப்பூரில் உள்ள ராஜ்பவன் வளாகத்தில் நடந்த விழாவில், கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா, புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அதேபோல, இணை அமைச்சர்களாக 10 பேர் பதவியேற்றனர். இவர்களில் ஐந்து பேருக்கு, தனி இலாகா ஒதுக்கப்பட்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்