ஹமீர்பூர், உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் மதத்திற்கு மாறியதுடன், அம்மதத்தைச் சேர்ந்த பெண்ணை இரண்டாம் தாரமாக திருமணம் செய்த, அரசு அதிகாரியின் பதவியை பறித்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புகார்
உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள ஹமீர்பூர் மாவட்டம் மவுதாஹா நகரில் துணை தாசில்தாராக பணியாற்றியவர் ஆஷிஷ் குப்தா. இவர் சமீபத்தில் தன் பெயரை முஹமது யூசப் என மாற்றியதுடன், உள்ளூர் தர்காவில் தொழுகையும் மேற்கொண்டார்.
இதனால், சந்தேகம் அடைந்த மசூதியின் பொறுப்பாளர் முஹமது முஸ்தாக், துணை தாசில்தார் ஆஷிஷ் குப்தா மீது மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தார். ஆஷிஷ் குப்தாவின் மனைவி ஆர்த்தியும் போலீசில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், ‘என் கணவர் ஆஷிஷ் குப்தாவை, முஸ்லிம் மதத்திற்கு சிலர் கட்டாயப்படுத்தி மாற்றி உள்ளதுடன், அம்மதத்தைச் சேர்ந்த பெண்ணை இரண்டாவதாக திருமணமும் செய்து வைத்துள்ளனர்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
விதிமீறல்
புகாரின் அடிப்படையில், ஆஷிஷ் குப்தா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன், மாநில அரசின் நன்னடத்தை விதிமுறைகளுக்கு மாறாக அவர் செயல்பட்டுள்ளதால், துணை தாசில்தார் பதவியும் பறிக்கப்பட்டது.
ஹமீர்பூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் டாக்டர் அருண் மிஸ்ரா கூறுகையில், ”துணை தாசில்தாராக பதவி வகித்த ஆஷிஷ் குப்தா, விதிகளை மீறி செயல்பட்டதால், அவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவரது நடத்தை விபரங்களையும் அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம்,” என்றார்.
இதற்கிடையில், ஆஷிஷ் குப்தாவின் மனைவி ஆர்த்தி அளித்த புகார் அடிப்படையில் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததாக, மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, மேலும் விசாரணை நடந்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்