India will become a superpower in 2080… China, America is predicted to surpass! | 2080ல் இந்தியா வல்லரசாகும்… சீனா, அமெரிக்காவை விஞ்சும் எனகணிப்பு!

புதுடில்லி : ‘வரும், 2080ம் ஆண்டுக்கு பின், உலகில் முதன்மையான பொருளாதார வல்லரசு நாடாக, இந்தியா மாறும். அதற்கு முன், 2032க்குள் ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்’ என, சி.இ.பி.ஆர்., எனப்படும் பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனை தலைமையிடமாக வைத்து, சி.இ.பி.ஆர்., எனப்படும் பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம், பொருளாதார ஆலோசனைகள் வழங்கும் சேவையிலும் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், உலக பொருளாதார லீக் அட்டவணையை, சி.இ.பி.ஆர்., வெளியிட்டு உள்ளது.

வலுவான வளர்ச்சி

அதில், கூறப்பட்டுள்ளதாவது:

வரும் 2032க்குள் ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக, இந்தியா உருவெடுக்கும்.

மேலும், மக்கள் தொகை மதிப்பீடுகள் மற்றும் கணிப்புகளின்படி, 2080ம் ஆண்டுக்கு பின், சீனா மற்றும் அமெரிக்காவை முந்தி, உலகில் முதன்மையான பொருளாதார வல்லரசு நாடாகவும் இந்தியா மாறும்.

அப்போது, இந்தியாவின், ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தி சீனாவை விட, 90 சதவீதம் அதிகமாகவும், அமெரிக்காவை விட, 30 சதவீதம் அதிகமாகவும் இருக்கும்.

இந்தியாவில், 2024 முதல் 2028 வரை, சராசரியாக, 6.5 சதவீத அளவில், நிலையான வலுவான வளர்ச்சி இருக்கும்.

இந்தியாவின் பொருளாதார உயர்வுக்கான முக்கிய உந்து சக்திகளாக, அந்நாட்டின் இளைஞர்கள், வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினர், ஆற்றல்மிக்க தொழில் முனைவோர்கள் மற்றும் உலக பொருளாதாரத்தில் அதிகரித்து வரும் ஒருங்கிணைப்பு போன்றவை உள்ளன.

சவால்கள்

எனினும், வறுமை ஒழிப்பு, சமத்துவமின்மை, மனித மூலதன மேம்பாடு, உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றில், இந்தியா முன்னோடியாக திகழ, தீர்வுகள் காணப்பட வேண்டியது அவசியம்.

இந்த சவால்களை திறம்பட எதிர்கொள்ள, அரசு, தனியார் துறை, சிவில் சமூகம் மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.

இதுபோன்ற சவால்கள் இருந்த போதிலும், நடப்பு, 2022 – 2023ம் நிதியாண்டில், 7.2 சதவீத வளர்ச்சியை இந்தியா பதிவு செய்துள்ளது.

வரும் 2023 – 2024ம் நிதியாண்டில், இந்தியாவின் வளர்ச்சி, 6.4 சதவீதம் என்ற அளவில் மிதமான வளர்ச்சியாக இருக்கும் என, கணிக்கப்படுகிறது.

இவ்வாறு சி.இ.பி.ஆர்., தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.