புதுடில்லி, பஞ்சாபில் நடந்த பல்வேறு தாக்குதல்களுக்கு காரணமான, காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரும், பிரபல தாதாவுமான லக்பீர் சிங் லண்டாவை, பயங்கரவாதியாக உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.
பஞ்சாபை சேர்ந்தவர் லக்பீர் சிங் லண்டா, 33; தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புடைய, சர்வதேச பாபர் கல்சா அமைப்பில் உள்ளார்.
கடந்த 2021ல், பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள உளவுத்துறை தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல் வழக்கில் இவர் தான் முக்கிய குற்றவாளி. அதேபோல, கடந்த ஆண்டு சர்ஹாலி போலீஸ் ஸ்டேஷன் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலும், இவர் மீது வழக்கு பதிவானது.
வடஅமெரிக்க நாடான கனடாவுக்கு, 2017ல் சென்ற லண்டா, அங்கிருந்தபடியே இந்தியாவின் அமைதியை சீர்குலைக்கும் சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல் நடத்த ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றை எல்லை தாண்டி அவர் அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பஞ்சாபில் நடந்த தாக்குதல்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், லண்டாவை மத்திய அரசு பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை அமைச்சம் நேற்று வெளியிட்டது.
சீக்கியர்களுக்காக தனி நாடு கேட்டு போராடி வரும் காலிஸ்தான் ஆதரவாளர்கள், கனடாவில் இருந்தபடி நம் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், இருநாட்டு உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அங்கு வசிக்கும் காலிஸ்தான் ஆதரவாளரான லக்பீர் சிங் லண்டா பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement