Modi will inaugurate a Hindu temple in Abu Dhabi on February 14 | அபுதாபியில் ஹிந்து கோவில் பிப்., 14ல் திறக்கிறார் மோடி

புதுடில்லி, அபுதாபியில் கட்டப்பட்டு வந்த ஹிந்து கோவிலின் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, அந்தக் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ல் திறந்து வைக்கிறார்.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு, 2015ல் முதன் முறையாக அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றார்.

அப்போது, அவர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அங்கு வசிக்கும் ஹிந்து மதத்தினருக்காக, அபுதாபியில் பிரமாண்ட கோவில் கட்ட எமிரேட்ஸ் அரசு அனுமதியளித்தது.

அபுதாபியின் ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில், 55,000 சதுர அடி நிலமும் வழங்கப்பட்டது.

இதையடுத்து, கோவில் கட்டுமான பணிகளை நிர்வகிக்க, குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரைச் சேர்ந்த, ‘பாப்ஸ்’ எனப்படும், போச்சசன்வாசி ஸ்ரீ அக் ஷார் புருஷோத்தமன் சுவாமி நாராயண் சன்ஸ்தா என்ற ஹிந்து அமைப்பிற்கு அனுமதி தரப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்று வந்த கோவிலின் கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியதால், அதன் திறப்பு விழாவை அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்கான அழைப்பிதழை, சுவாமி ஈஸ்வர் சரந்தாஸ், சுவாமி பிரம்ம விஹாரிதாஸ் மற்றும் பாப்ஸ் அமைப்பின் நிர்வாகிகள், புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் நேற்று முன்தினம் வழங்கினர்.

பாப்ஸ் அமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், ‘வசுதைவ குடும்பகத்தின் லட்சியத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவான இந்தக் கோவில், நம்பிக்கைகள் மற்றும் மரபுகளால் மட்டும் வேரூன்றவில்லை.

‘மாறாக பல்வேறு கலாசாரங்கள் மற்றும் நாகரிகங்களின் சங்கமமாக எழுப்பப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா, பிப்., 14ல் நடக்கிறது’ என்றனர்.

‘ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஏழு அமீரகங்களை குறிக்கும் வகையில், ஏழு கோபுரங்களுடன் எழுப்பப்பட்டுள்ள கோவிலின் கட்டுமான பணிக்கு, சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய, ௩௦,000 கற்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

கோவில் சுவரின் அடிப்பகுதிக்கு கிரானைட் கற்களும், மேற்பகுதிக்கு இளஞ்சிவப்பு கற்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளதுடன், இரும்பு கம்பிகள் எதுவும் இல்லாமல், பாரம்பரிய ஹிந்து கோவிலாக கட்டப்பட்டுள்ளது, இதன் சிறப்பம்சம்.

திறப்பு விழா மற்றும் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, பிப்., 18 முதல் கோவிலில் தரிசனத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.