தே.மு.தி.க நிறுவனரும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் (டிசம்பர் 28) உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் விஜயகாந்த்தின் உடல் நேற்று (டிசம்பர் 29) தீவுத்திடலில் வைக்கப்பட்டது. பின்னர், இறுதியாக விஜயகாந்த்தின் உடல் தீவுத்திடலிலிருந்து, கோயம்பேட்டிலுள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்துக்கு ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு, 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், விஜயகாந்த்தின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் இறுதியாக அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், அரசியல் தலைவர்கள், காவலர்கள், ஊடகங்கள், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த விஜயகாந்த்தின் மனைவியும், தே.மு.தி.க பொதுச்செயலாளருமான பிரேமலதா, பொது இடத்தில் விஜயகாந்த்துக்குச் சிலை வைக்குமாறும், மணிமண்டபம் கட்டித்தருமாறும் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து, தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “கேப்டன் விஜயகாந்த் எங்கும் போகவில்லை. நம்மோடுதான் இருக்கிறார். தலைமைக் கழகத்திலேயே மிகப்பெரிய சமாதி அமைக்கவிருக்கிறோம். மக்கள் எல்லோரும் நேற்று உள்ளே வந்து அஞ்சலி செலுத்தவேண்டும் என்றுதான் விரும்பினோம். ஆனால், சின்ன இடம் என்பதால், லட்சக்கணக்கான மக்களை உள்ளே விடமுடியாது என்று போலீஸார் கூறிவிட்டனர். ஆனால், இன்றுமுதல் பொதுமக்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. யார் வேண்டுமானாலும், எப்போதுவேண்டுமானாலும் தலைமைக் கழகத்துக்கு வந்து உங்கள் வீட்டுப் பிள்ளைக்கு மலர்தூவி இறுதியஞ்சலி செலுத்தலாம்.

ஊருக்கே சோறு போட்டவர் இன்று நம்மோடு இல்லை என்கிறபோது, ஒவ்வொரு பருக்கையிலும் கேப்டன்தான் தெரிகிறார். அவர் விட்டுச்சென்ற பணிகள், கடமைகள் எங்கள் கைகளில் கொடுத்துச் சென்றிருக்கிறார். இனி, தே.மு.தி.க-வினர் அனைவரும் ஒரே கரமாக இணைந்து, எந்தவொரு ஈகோவும் இல்லாமல் கேப்டனின் லட்சியத்தை வென்றெடுப்பதுதான் எங்கள் லட்சியம். அந்த வெற்றிக்கனியைப் பறித்து கேப்டனின் காலடியில் சமர்ப்பிக்கும் நாள்தான் எங்களுக்கான நாள். அதுதான், கேப்டனுக்கு நாங்கள் செய்கிற மிகப்பெரிய கடமை.
முதலமைச்சர், அமைச்சர்களிடத்தில், அவர்களாக ஒரு பொது இடத்தைத் தேர்ந்தெடுத்து கேப்டன் சிலையுடன் மணிமண்டபம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறோம். தே.மு.தி.க என்றில்லாமல் ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக இதை நாங்கள் முன்வைக்கிறோம். அதை நிறைவேற்றித் தருவார்கள் என்று நம்புகிறோம். சாதி, மதம், இனம், மொழி என எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு கட்சிப் பாகுபாடு இல்லாமல், ஒட்டுமொத்த மக்களும் இறுதியஞ்சலி செலுத்தியதுதான், கேப்டன் பெற்ற பாக்கியம். மனிதன் பிறந்தது சாதாரணமாக இருக்கலாம், ஆனால் முடிவு வரலாறாக இருக்கவேண்டும் என்று சொல்வார்கள். அத்தகைய வரலாற்றைப் படைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் கேப்டன்.

இந்தப் பிரபஞ்சம் இருக்கும் வரை அந்த வரலாறு நிலைத்து நிற்கும். இலங்கையில் நேற்று ஒரு மாகாணம் முழுக்க கடையடைப்பு செய்திருக்கிறார்கள். கடல் அலையைவிட, மக்கள் தலை அதிகம் என்பதை கேப்டனின் இறுதிப் பயணத்தில் மக்கள் நிரூபித்திருக்கிறார்கள். சொல்வதற்கு எனக்கு வார்த்தைகளே இல்லை. எந்த வார்த்தை நான் கூறினாலும் அது சிறியதாகிவிடும். வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு மக்களின் அன்புக்கு நான் தலைவணங்குகிறேன். அவரின் புகழ் குறையாத அளவுக்கு, பலமடங்கு நாங்கள் அதை உயர்த்திப் பிடிப்போம்” என்று கூறினார்.