வாஜிமாஜப்பானில், நேற்று முன் தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 55 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான கட்டடங்கள், வாகனங்கள், சாலைகள் சேதமடைந்தன.
கிழக்காசிய நாடான ஜப்பானின், ஹோன்சு தீவில் நேற்று முன்தினம் பிற்பகல் அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஹோன்சு தீவின் மேற்கு கடலோர மாவட்டமான இஷிகவாவை மையமாக வைத்து இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
மின்சார நிலையம்
இவை ரிக்டர் அளவில் 5 முதல் 7.6 வரை பதிவானது. இதனால் இஷிகவா மாவட்டத்தின் பல்வேறு நகரங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், புல்லட் ரயில் நிலையங்கள் என ஆயிரக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்தன.
நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் 4 அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழுந்து, இஷிகவாவின் முக்கிய நகரான வாஜிமாவை தாக்கின.
அங்குள்ள ஆற்றின் வழியாக கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. நிலநடுக்கம் ஓய்ந்த பிறகும் நுாற்றுக்கும் மேற்பட்ட நில அதிர்வுகளை மக்கள் உணர்ந்தனர்.
நிலநடுக்கத்தின் போது வீடுகளுக்குள் இருந்த 55 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகிஉள்ளன.
மேலும் பிரதான சாலைகள், ‘மொபைல் போன்’ கோபுரங்கள், மின்சார நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இஷிகவாவில் பாதிப்பு அதிகம் இருப்பதால், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா 1,000 ராணுவ வீரர்களை மீட்பு பணிக்கு அனுப்பி வைத்துள்ளார். வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் பள்ளிகள், சமூதாய கூடங்கள், கூட்ட அரங்குகளில் தஞ்சமடைந்து உள்ளனர்.
கவலை
இந்நிலையில், ஜப்பானின் மேற்கு கடலோர பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை நேற்று காலை விலக்கி கொள்ளப்பட்டன. நேற்று பிற்பகலில் இருந்து பல இடங்களில் புல்லட் ரயில் சேவையும் துவங்கியது.
ஜப்பான் நிலநடுக்கம் குறித்து பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் கவலை தெரிவித்தனர். ஜப்பான் மக்களுக்கு தேவையான எல்லாவிதமான அடிப்படை உதவிகளையும் செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக ஜோ பைடன் கூறினார்.
அடுத்த அதிர்ச்சி!
கிழக்காசிய நாடான ஜப்பானில், டோக்கியோ சர்வதேச விமான நிலையம் உள்ளது. சப்போரோ நகரிலிருந்து 379 பயணியருடன் புறப்பட்ட ‘ஏர்பஸ் ஏ350’ என்ற விமானம் நேற்று டோக்கியோ சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்கியது. அதே ஓடுபாதையில் ஜப்பானின் கடலோர பாதுகாப்பு படையின் ரோந்து விமானம் ஒன்று எதிர்பாராத வகையில் குறுக்கிட்டது. அப்போது தரையிறங்கி கொண்டிருந்த பயணியர் விமானத்தின் இறக்கை ரோந்து விமானத்தின் மீது மோதியது.மோதிய மறுநொடி ரோந்து விமானம் வெடித்துச் சிதறி, பல அடி உயரத்திற்கு தீ பிழம்பை கக்கியது. ரோந்து விமானத்தில் இருந்த ஐந்து ஊழியர்கள் இறந்ததாகவும், விமானி மட்டும் தப்பித்ததாக ஜப்பான் அரசு ஊடகம் தெரிவித்தது. இந்த விபத்தில் பயணியர் விமானத்தின் இறக்கை மற்றும் இன்ஜின் பகுதிகளிலும் தீ பிடித்தது. விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்களால் எடுக்கப்பட்ட, ‘வீடியோ’ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. இந்த விபத்தின் போது, சாதுர்யமாக செயல்பட்ட பயணியர் விமானத்தின் விமானி, வெடித்து சிதறிய ரோந்து விமானத்தில் இருந்து தொலைவாக சென்று நிறுத்தினார். உடனே அவசர அவசரமாக கதவு கள் திறக்கப்பட்டு, பயணியர் அனைவரும் பாதுகாப்பாக சறுக்கியபடி வெளியேறினர். தீயணைப்பு வீரர்கள் 40க்கும் மேற்பட்ட வண்டிகளில் விரைந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் பயணியர் விமானம் முற்றிலுமாக எரிந்து போனது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்