Owaisi inciting religious conflict: Hindu Sena complains to police | மத மோதலை தூண்டுகிறர் ஓவைசி : ஹிந்து சேனா அமைப்பு போலீசில் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக ஐதராபாத் லோக்சபா எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவருமான ஓவைசி தெரிவித்த கருத்திற்கு ஹிந்துசேனா, ஓவைசி மீது டில்லி போலீசில் புகார் அளித்துள்ளது.

வரும் 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவில் பல்வேறு தரப்பிற்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு விழா அழைப்பிதழ் வந்ததா என ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் ஓவைசியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு ஓவைசி செல்லமாட்டேன் என்பதுடன் சர்ச்சையான கருத்தை தெரிவித்தார்.

அப்போது ஓவைசி கூறுகையில், முஸ்லிம் இளைஞர்கள் இனி ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறீர்கள். நாம் நமது மசூதியை இழந்துவிட்டோம். இன்றைய இளைஞர்களான நீங்கள் நாளை குடிமகன்கள். உங்கள் இதயத்தில் வலி ஏற்படவில்லையா ? நம் மசூதிகளை காப்பாற்றவில்லையெனில் பறிபோய்விடும். உங்களின் கண்களை திறந்து வைத்துக்கொண்டு, உங்கள் ஊருக்கும், உங்களின் அண்டை வீட்டாருக்கும் உதவுவது போல ஒன்று பட்டு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இது தொடர்பாக ஹிந்து சேனா அமைப்பின் தேசிய தலைவர் விஷ்ணு குப்தா டில்லி போலீசில் புகார் அளித்தார். அதில் பொறுப்பற்ற முறையில் பேசிய ஓவைசியின் கருத்து மத மோதல்களையும் , இந்தியர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிக்கிறது என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.