Doctor Vikatan: குளிர்காலங்களில் காதுகள் அடைத்துக்கொள்வது ஏன்?

Doctor Vikatan: குளிர்காலங்களில் இரவில் மட்டும் காதுகள் அடைத்துக்கொள்வது ஏன்…. காலையில் தூங்கி எழுந்ததும் அது சரியாகிவிடுகிறது. இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம், இதை எப்படி சரிசெய்வது?

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பொது மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி 

டாக்டர் .சஃபி,M. சுலைமான்

காதுகளிலும் நமக்கு ரத்த ஓட்டம் இருக்கும். அந்த ரத்த ஓட்டமானது ஈஸ்டேஷியன் டியூப் (Eustachian tube), செவிப்பறை மற்றும் காதுகளில் உள்ள சின்னச் சின்ன எலும்புகள் போன்றவற்றின் செயல்பாடுகளுக்கு மிகவும் அடிப்படை.

இந்தப் பகுதிகளில் ரத்த ஓட்டம் பாதிக்கப்படாமலிருந்தால்தான் கேட்கும் திறன் இயல்பாக இருக்கும். குளிர்காலங்களிலும், மலைப் பிரதேசங்களுக்குச் செல்லும்போதும் அதிக உயரம் மற்றும் குளிர் காரணமாக ரத்த ஓட்டம் மந்தமாகும்.  அதன் விளைவாக  அந்த நேரத்தில் காதுகளின் கேட்கும் திறனும் சற்று குறையலாம்.  காதுகளை அடைத்துக்கொண்டது போன்ற உணர்வு ஏற்படலாம்.

குளிர்

 காதுகளுக்குள் இயல்பாகவே எல்லோருக்கும் மெழுகு போன்ற பொருள் இருக்கும். காதுகளைச் சுற்றியுள்ள சுவர்களில் அழுக்கு மற்றும் வியர்வை சேர்ந்து உறைந்து மெழுகு போன்று உருவாகும். அதை முறைப்படி சுத்தப்படுத்தாமல் இருப்பவர்களுக்கும் காது அடைத்துக்கொண்டது போன்ற உணர்வு ஏற்படலாம்.  

காதுகளை நீங்களாக சுத்தப்படுத்துவதைத் தவிர்க்கவும். காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அணுகி, காதுகளை முறையாகச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். 

காது

குளிர் இல்லாத நாள்களிலும் இப்படி காதுகள் அடைத்துக்கொள்கிற பிரச்னையை உணர்ந்தால் அதை அலட்சியம் செய்யாமல் உடனே இ.என்.டி மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியதும் அவசியம். காதுகள் அடைத்துக்கொள்ள வேறு காரணங்கள்  இருக்கின்றனவா என்றும் தெரிந்துகொண்டு சரியான சிகிச்சையை மேற்கொள்ள முடியும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.