புதுடில்லி, ‘கணவரிடம் இருந்து பிரிந்து வாழும் அரசு பெண் ஊழியர்கள், குடும்ப ஓய்வூதியம் பெற தங்களது குழந்தைகளின் பெயரை பரிந்துரை செய்யலாம்’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய சிவில் சர்வீசஸ் பென்ஷன் விதிகளின்படி, அரசு ஊழியர் அல்லது ஓய்வு பெற்ற அரசு ஊழியர், மனைவி அல்லது கணவருடன் இருந்தால், அவர் உயிரிழந்த பின், மனைவி அல்லது கணவருக்கு முதலில் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.
இதன் பின், மனைவி அல்லது கணவர் உயிரிழந்தால், அவர்களது குழந்தைகள் குடும்ப ஓய்வூதியத்தை பெற தகுதி பெறுகின்றனர்.
இந்நிலையில், இந்த விதிகளில், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை திருத்தம் செய்துள்ளது.
அதன்படி, குடும்ப ஓய்வூதியம் பெற, கணவருக்கு பதிலாக குழந்தைகளை பரிந்துரை செய்ய, அரசு பெண் ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘அரசு பெண் ஊழியர் அல்லது ஓய்வு பெற்ற அரசு பெண் ஊழியர், கணவருக்கு எதிராக வரதட்சணை, விவாகரத்து போன்ற வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, குடும்ப ஓய்வூதியத்தை பெற கணவருக்கு பதிலாக தங்களது குழந்தைகளை பரிந்துரை செய்யலாம்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு பெண் ஊழியர்கள் வலியுறுத்தியதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement