பெங்களூரு: ஹூப்ளியில் நடந்த கைது நடவடிக்கையில் தவறான தகவல்களை பாஜக பரப்புவதாகக் குற்றம் சாட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் பெங்களூருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
1992ம் ஆண்டு அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து கர்நாடகாவின் ஹூப்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக ஸ்ரீகாந்த் பூஜாரி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பதியப்பட்டு 31 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்ரீகாந்த் பூஜாரி கைது செய்யப்பட்டார். நிலுவையில் உள்ள பழைய வழக்குகள் மீது நடவடிக்கை எடுப்பது வழக்கம்தான் என்றும், அதன் அடிப்படையிலேயே ஸ்ரீகாந்த் பூஜாரி கைது செய்யப்பட்டதாகவும் ஹூப்ளி-தார்வாட் காவல் ஆணையர் ரேணுகா சுகுமார் தெரிவித்திருந்தார்.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் வரும் 22ம் தேதி பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ள நிலையில், கரசேவகரான ஸ்ரீகாந்த் பூஜாரி கைது செய்யப்பட்டிருப்பது பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம் சாட்டி பாஜக சார்பில் நேற்று ஹூப்ளியிலும், பெங்களூருவிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இந்துக்களின் உணர்வுகளுக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
பாஜகவின் ஆர்ப்பாட்டம் குறித்து பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார், “1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து ஹூப்ளியில் நடந்த கலவரத்தில் தொடர்புடைய நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இது சட்டப்படியான ஒரு நடவடிக்கை. அரசியல் பழிவாங்கலில் நாங்கள் ஈடுபடவில்லை. சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். சமூக விரோத செயல்களுக்கு கர்நாடகாவில் இடமில்லை” என தெரிவித்தார்.
இந்நிலையில், ஸ்ரீகாந்த் பூஜாரி கைது விவகாரத்தில் தவறான தகவல்களை பாஜக பரப்புவதாகக் குற்றம் சாட்டி பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர், பாஜகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.