2023ல் 'பான் இந்தியா' வசூலை இழந்த தெலுங்கு சினிமா

'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' என சில தெலுங்கு படங்கள் மூலம் தலா 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தியத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது தெலுங்குத் திரையுலகம். 'புஷ்பா' படத்தின் முதல் பாகமும் ஹிந்தியில் நன்றாகவே வசூலித்தது. அந்தப் பெருமையை கடந்த ஆண்டில் இழந்தது தெலுங்குத் திரையுலகம்.

2023ம் ஆண்டில் பொங்கலை முன்னிட்டு, சீனியர் நடிகர்களான சிரஞ்சீவி நடித்து வெளிவந்த 'வால்டர் வீரய்யா' படம் 200 கோடியும், பாலகிருஷ்ணா நடித்து வெளிவந்த 'வீர சிம்ஹா ரெட்டி' படம் 100 கோடியும் வசூலித்தது. அந்த வெற்றிப் பயணம் அடுத்தடுத்து தொடரும் என்று எதிர்பார்த்த நிலையில் அது ஏமாற்றத்தைத்தான் தந்தது.

பிரபாஸ் நடித்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'ஆதி புருஷ்' படம் சர்ச்சைகளுடன் வெளியாகி எதிர்பார்த்த வசூலை தெலுங்கு மாநிலங்களிலேயே கொடுக்காமல் போனது. மொத்தமாகவே 300 கோடி வசூலைத்தான் அந்தப் படம் கடந்தது. இருப்பினும் வருடக் கடைசியில் பிரபாஸ் நடித்து வெளிவந்த 'சலார்' படம் தெலுங்கு மாநிலங்களில் மட்டும் பெரிய வசூலைப் பெற்றது. அதே சமயம், இதர தென்னிந்திய மாநிலங்களிலும், ஹிந்தியிலும் அப்படத்திற்கு எதிர்பார்த்த வசூல் கிடைக்காமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும், 625 கோடி வசூலைக் கடந்துள்ளதாக படக்குழு அறிவித்தது.

பவன் கல்யாண் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் இயக்குனரான சமுத்திரக்கனி இயக்கிய 'ப்ரோ' படம் சுமாரான வரவேற்பைத்தான் பெற்றது. பாலகிருஷ்ணா நடித்து வெளிந்த 'பகவந்த் கேசரி' குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்று 100 கோடி வசூலைத் தொட்டது.

விஜய் தேவரகொன்டா நடித்து வெளிவந்த 'குஷி', அனுஷ்கா நடித்து வெளிவந்த 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி,' நானி நடித்து வெளிவந்த 'தசரா', சாய் தரம் தேஜ் நடித்து வெளிவந்த 'விருபாக்ஷா', ஆனந்த் தேவரகொன்டா நடித்து வெளிந்த 'பேபி', ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வரவேற்பைப் பெற்றன.

தமிழிலிருந்து தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியான விஜய் நடித்த 'வாரிசு, லியோ' ஆகிய படங்கள் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலான வசூலைப் பெற்றதாகத் தெரிவிக்கிறார்கள். தனுஷ் நடித்து தமிழில் வெளிவந்த 'வாத்தி' ஒரே சமயத்தில் தெலுங்கில் 'சார்' என்ற பெயரில் வெளியாகி அங்கு நல்ல வசூலைப் பெற்றது. தெலுங்கு இயக்குனராக சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய 'அனிமல்' ஹிந்திப் படம் தெலுங்கு ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது.

சிறிய படங்களில் 'பிரியதர்ஷி நடித்த 'பலாகம்', ஸ்ரீவிஷ்ணு நடித்த 'சாமஜவரகமனா', வசூல் ரீதியாக எதிர்பாராத வெற்றியைப் பெற்றன.

நேரடி தெலுங்குப் படம் என்ற கணக்கில் அதிக வசூலைக் குவித்த படங்களில் 'சலார்' படம் 600 கோடி வசூலைக் கடந்தது. பிரபாஸ் நடித்து ஹிந்தியுடன் சேர்த்து தெலுங்கிலும் தயாரானதாக சொல்லப்பட்ட 'ஆதிபுருஷ்' படம் 350 கோடி வசூலையும் சேர்த்தால் தெலுங்கு ஹீரோக்களில் 1000 கோடி வசூலைக் கொடுத்த நடிகராக முன்னணியில் இருக்கிறார் பிரபாஸ். இரண்டு வெற்றிகளுடன் பாலகிருஷ்ணா அடுத்த இடத்தில் இருக்கிறார்.

தெலுங்குத் திரையுலகத்தில் அதிக ரசிகர்களை வைத்துள்ள மகேஷ்பாபு, ராம் சரண், ஜுனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் ஆகியோரது ஒரு படம் கூட கடந்த ஆண்டில் வெளியாகவில்லை. அது தெலுங்குத் திரையுலக பாக்ஸ் ஆபீஸுக்கு பெரும் இழப்பாகத்தான் அமைந்தது. இந்த ஆண்டில் அவர்கள் நடித்துள்ள படங்கள் வருவதால் அது சரி செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

பான் இந்தியா என பரபரப்பாகப் பேச வைத்த திரையுலகம் தெலுங்குத் திரையுலகம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், அந்தப் பெருமையை கடந்த ஆண்டில் இழந்துவிட்டார்கள் என்பதும் உண்மை. அந்தப் பெருமையை ஹிந்திப் படங்கள் மீண்டும் தட்டிப் பறித்தது. அதை இந்த ஆண்டில் வெளியாக உள்ள சில பல பான் இந்தியா படங்கள் மூலம் மீண்டும் தெலுங்குத் திரையுலகம் கைப்பற்றுமா ?, வெயிட் செய்யண்டி…….

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.