வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர் 1-1 என சமன் ஆனது. இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் இந்தியா தோற்றது. இரண்டாவது டெஸ்ட் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 55, இந்தியா 153 ரன் எடுத்தன. முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 63 ரன் எடுத்திருந்தது. மார்க்ரம் (36), பெடிங்காம் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் 2வது இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்ரிக்க அணிக்கு, இந்தியாவின் பும்ரா தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ டேவிட் பெடிங்காம் (11), கைல் வெர்ரெய்னே (9), மார்கோ ஜான்சன் (11), கேஷவ் மஹாராஜ் (3) வெளியேறினர். தனிநபராக போராடிய துவக்க வீரர் மார்க்ரம் (106) சதம் கடந்து ஆறுதல் தந்தார். ரபாடா (2), நிகிடி (8) நிலைக்கவில்லை.
தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 176 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. பர்கர் (6) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் பும்ரா 6, முகேஷ் குமார் 2 விக்கெட் சாய்த்தனர். இந்தியாவின் வெற்றிக்கு 79 ரன் நிர்ணயிக்கப்பட்டது.
சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (28) நல்ல துவக்கம் தந்தார். சுப்மன் கில் (10) நிலைக்கவில்லை. விராத் கோலி 12 ரன்னில் அவுட்டானார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 80 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா (17), ஸ்ரேயாஸ் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement