புதுடில்லி: சிறைகளில் உள்ள கைதிகளிடம் ஜாதி ரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதை எதிர்க்கும் வழக்கில் தமிழகம், உத்தர பிரதேசம் உட்பட, 11 மாநிலங்களுக்கு ‘நோட்டீஸ்’ அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிராவின் கல்யானைச் சேர்ந்த சுகன்யா சாந்தா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனு: சில குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ள சிறை கையேடுகள், ஜாதி பாகுபாடு காட்டும் வகையில் உள்ளன. குறிப்பாக பழங்குடியினருக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுகிறது.
சிறைகளில் வேலை ஒதுக்குவதிலும், சிறை அறைகளில் அடைக்கப்படுவதிலும் இந்தப் பாகுபாடு உள்ளது. இந்த பாகுபாடுகளை நீக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப், ஒடிசா, ஜார்க்கண்ட், கேரளா மற்றும் மஹாராஷ்டிராவில் இந்த பாகுபாடு உள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இது குறித்து பதிலளிக்கும்படி, இந்த 11 மாநிலங்கள், மத்திய உள்துறை அமைச்சகம் உள்ளிட்டவற்றுக்கு அமர்வு உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement