Did Rama eat non-veg? Controversy over MLAs speech! | ராமர் அசைவம் சாப்பிட்டாரா? எம்.எல்.ஏ., பேச்சால் சர்ச்சை!

ஷீரடி, ”ராமர், 14 ஆண்டுகள் வனவாசம் இருந்தபோது மிருகங்களை வேட்டையாடியவர். எனவே, அவர் அசைவ உணவு பழக்கம் உடையவராக தான் இருந்திருக்க முடியும்,” என, சரத் பவார் பிரிவைச் சேர்ந்த தேசியவாத காங்., – எம்.எல்.ஏ., ஜிதேந்திர அவாத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிராவின் அஹமத்நகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடியில் நடந்த கூட்டத்தில், சரத் பவார் பிரிவைச் சேர்ந்த தேசியவாத காங்., – எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான ஜிதேந்திர அவாத் பேசியதாவது:

ராமர் பகுஜன் எனப்படும் பெரும்பான்மை பிரிவை சேர்ந்தவர். வேட்டையாடி உண்ணும் இனத்தைச் சேர்ந்தவர். அவர் சைவ உணவு பழக்கம் கொண்டவராக இருந்திருக்க முடியாது.

காட்டில் 14 ஆண்டுகள் வாழ்ந்த ஒருவருக்கு சைவ உணவு மட்டுமே கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அவரை பின்பற்றி தான் நாங்கள் ஆட்டுக்கறி சாப்பிடுகிறோம். பா.ஜ., தங்கள் சுய லாபத்திற்காக, ராமரை சைவ உணவு பழக்கம் உடையவராக சித்தரித்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரும் இருந்தார். அவரது கட்சி எம்.எல்.ஏ.,வின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள அஜித் பவார் பிரிவை சேர்ந்த தேசியவாத காங்., நிர்வாகிகள், இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, எம்.எல்.ஏ., ஜிதேந்திர அவாத் வீட்டின் முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அவாத் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யும்படி, பா.ஜ., – எம்.எல்.ஏ., ராம் கதம், மும்பை காட்கோபர் போலீஸ் ஸ்டேஷனில் மனு அளித்துள்ளார்.

இதற்கிடையே, எம்.எல்.ஏ., ஜிதேந்திர அவாத் நேற்று கூறுகையில், ”புரிதல் இன்றி நான் இவ்வாறு பேசவில்லை. வரலாற்றை திரிப்பது நோக்கமல்ல. என் பேச்சு யரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கோருகிறேன்” என, தெரிவித்தார்.

தவறான தகவல்!

ஜிதேந்திர அவாத் பேசியது முற்றிலும் தவறானது. வனவாசத்தின் போது ராமர் அசைவ உணவு உண்டார் என, எந்த குறிப்புகளிலும் இல்லை. அவர் காட்டில் பழங்களை மட்டுமே உணவாக உண்டார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

இவரைப் போன்ற பொய்யர்களுக்கு ராமரை இழிவுபடுத்த உரிமை இல்லை.

ஆச்சார்யா சத்யேந்திர தாஸ்

ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா தலைமை பூசாரி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.