Insisting on providing compensation to passengers in case of flight cancellation | விமானம் ரத்து செய்யப்பட்டால் பயணியருக்கு தீர்வு வழங்க வலியுறுத்தல்

புதுடில்லி,விமானம் புறப்படுவதில் தாமதம் மற்றும் விமானம் ரத்து செய்யப்பட்டது தொடர்பான பயணியரின் புகார்களுக்கு நியாயமான முறையில் தீர்வு வழங்க, விமான நிறுவனங்களை, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வலியுறுத்திஉள்ளது.

கடந்த மாதம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஒட்டி, நாடு முழுதும் ஏராளமானோர் விமான பயணம் மேற்கொண்டனர். புத்தாண்டை ஒட்டியும் வழக்கத்தைவிட ஏராளமானோர் குடும்பத்தினருடன் விமானங்களில் பயணம் செய்தனர்.

பலருக்கு இந்த பயணம் உற்சாக அனுபவத்தை தந்தாலும், கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் புறப்படுவதில் ஏற்பட்ட தாமதம், விமானம் ரத்து செய்தல் போன்றவை பயணியருக்கு கசப்பான அனுபவத்தை தந்தன.

இது தொடர்பாக விமான நிறுவனங்களுக்கும், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்துக்கும் புகார்கள் குவிந்தன. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கும் புகார்கள் அனுப்பப்பட்டன.

இவை குறித்து விமான போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடந்த மாதத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஒரு சில இடங்களில் அவை தாமதமாக புறப்பட்டன. இதனால், பயணியர் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

இது குறித்து புகார்கள் வந்ததை அடுத்து, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சம்பந்தப்பட்ட விமான நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த விவகாரத்தில் பயணியர் புகார்களுக்கு நியாயமான முறையில் தீர்வு வழங்க, நிறுவனங்களை அவர் வலியுறுத்தினார். அதேசமயம், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்ட விதிமுறைகளை பின்பற்றும்படியும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசின் விதிமுறைகளின்படி, விமானம் ரத்து செய்யப்பட்டால் பயணியர் மாற்று விமானத்தில் பயணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லையென்றால், விமான கட்டணத்தின் முழு பணத்தையும், கூடுதல் இழப்பீடுடன் வழங்க வேண்டும்.

அதேசமயம், மாற்று விமானத்திற்கு காத்திருக்கும் பயணியருக்கு உணவு மற்றும் சிற்றுண்டிகளை சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்பாராதவிதமாக ஏற்படும் அசாதாரணமான சூழலுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது-.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.