புதுடில்லி :பங்குச் சந்தை வர்த்தகத்தில் மோசடி செய்ததாக, அதானி குழுமத்துக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்துள்ளது. ‘இந்த விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழு அல்லது சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை. ‘செபி’ அமைப்பு தன் விசாரணையை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும்’ என, நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘ஹின்டர்பர்க் ரிசர்ச்’ என்ற முதலீட்டு ஆய்வு நிறுவனம் கடந்தாண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இதில், ‘பிரபல தொழிலதிபர் கவுதம் அதானியின் அதானி குழுமம், பங்குச் சந்தை வர்த்தகத்தில் மோசடி செய்துஉள்ளது’ என, குறிப்பிடப்பட்டிருந்தது.
குற்றச்சாட்டு
இதையடுத்து, பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவை சந்தித்ததன. மேலும் இது அரசியல் ரீதியிலும் பெரும் பிரச்னையானது.
அதானி குழுமத்தை காப்பாற்ற, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முயற்சிப்பதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இந்த விவகாரம் தொடர்பாக பார்லிமென்டிலும் பிரச்னை எழுப்பப்பட்டது. மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாக்குர் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, செபி எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரியம் விசாரித்து வருகிறது.
மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையில், நிபுணர் குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத்தது.
இந்த நிபுணர் குழு அளித்த அறிக்கையில், ‘அதானி குழுமம் மோசடி செய்தது என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை’ என, குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, கடந்தாண்டு நவ., 24ல், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளித்தது.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
இந்த வழக்கின் தன்மை மற்றும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இதில், எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு விசாரணை குழு அல்லது சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக, செபி தீவிரமாக விசாரித்து வருகிறது. அதானி குழுமம் மீது கூறப்பட்டுள்ள, 24 குற்றச்சாட்டுகளில், 22ல் விசாரணை முடிந்துள்ளதாக செபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள இரண்டு குற்றச்சாட்டுகளில், மூன்று மாதங்களுக்குள் விசாரணை நடத்தி, அறிக்கையை செபி தாக்கல் செய்ய வேண்டும்.
இதற்கு முன் பல வழக்குகளில், சிறப்பு விசாரணை குழு அல்லது மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிட்டுஉள்ளோம்.
அதற்கான அதிகாரம் நீதிமன்றத்துக்கு உள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் அதுபோன்ற தேவை ஏற்படவில்லை.
செபி என்பது ஒரு தன்னாட்சி அமைப்பு. அதன் மீது முழு நம்பிக்கை உள்ளது. சிறப்பு விசாரணை குழுவின் விசாரணைக்கு உத்தரவிடுவது என்பது அபூர்வமாக இருக்க வேண்டும்.
இந்த விஷயத்தில், நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையிலும், மோசடி நடந்ததற்கான ஆதாரம் ஏதுமில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அந்த நிபுணர் குழுவில் உள்ளவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
சிலர் வேண்டுமென்றே, அந்தக் குழுவினர் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக புகார் கூறி வருகின்றனர்.
திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் ஊழலை வெளிப்படுத்தும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், செபி வேண்டுமென்றே விசாரணையை தாமதப்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது; அதை நாங்கள் நிராகரிக்கிறோம்.
ஆதாரம்
பத்திரிகைகளில் வெளியான செய்திகள், மூன்றாம் தரப்பு அமைப்புகள் வெளியிடும் அறிக்கைகளின் அடிப்படையில் நீதிமன்றம் விசாரணை நடத்த முடியாது.
எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ள இதுபோன்ற செய்திகளை, அறிக்கைகளை, ஒரு ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், செபி அமைப்புக்கு மீண்டும் அவகாசம் அளித்து, நீதிமன்றம் மிகவும் தாராளமான சலுகையை அளித்துள்ளது. தொழிலதிபர்களுக்கு ஆதாரவான இந்த அரசுக்கு எதிராகவும், விலைவாசி உயர்வு, வேலையின்மை, சமத்துவமின்மைக்கு எதிராகவும் எங்களுடைய போராட்டம் தொடரும்.
ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்.,
‘தாராளமான சலுகை!’
‘உண்மை வென்றது!’
தொழில் அதிபர் கவுதம் அதானி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, உண்மை வெல்லும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. சத்யமேவ ஜெயதே. எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. நாட்டின் வளர்ச்சிக்கு எங்களாலான பங்களிப்பை தொடர்ந்து அளிப்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்