சென்னை: மரங்களை வெட்டி, கொண்டு செல்ல, ஆன்லைனில் அனுமதி கோரும் முறையை அறிமுகப்படுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்க தமிழக கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி’ என்ற களப்பயிற்சி கோவை, திருவண்ணாமலை, தென்காசி, தருமபுரி, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் வரும் 7-ம் தேதி காலை 10 முதல் மதியம் 3 மணி வரை நடத்தப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் ஊருக்கு அருகில் உள்ள பண்ணையை பார்வையிட்டு, நன்றாக வளரக்கூடிய மரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 94425 90079, 94425 90081 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.
சட்ட சிக்கல்கள்: தமிழகத்தில் 36 நாட்டு மரங்களை மட்டுமே எந்த தடையுமின்றி வெட்டி கொண்டு செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேக்கு, சந்தனம், செம்மரம், வேங்கை, ஈட்டி போன்ற பொருளாதார லாபம் தரக்கூடிய மரங்களை வெட்டி கொண்டு செல்ல நிறைய சட்ட சிக்கல்கள் உள்ளன. இந்த மரங்களை விவசாயிகளால் வெட்ட முடியும். ஆனால் எடுத்து செல்ல முடியாது.
வனத்துறை அனுமதி: இதற்காக வனத்துறை அதிகாரிகளிடம் சென்று அனுமதி வாங்க வேண்டிய நிலை இருப்பதால், இதுபோன்ற மரங்களை நடவே விவசாயிகள் தயங்குகின்றனர். அரசு இந்த சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வந்து போக்குவரத்துக்கான அனுமதியை வேளாண் அதிகாரிகளிடமே பெற்றுக்கொள்ள வழிவகுக்க வேண்டும். இதனால் மர விவசாயிகளுக்கு மானியமும், காப்பீடும், கூடுதல் சலுகைகளும் கிடைக்க வாய்ப்புகள் உருவாகும்.
விவசாயிகள் மரம் நடுவதற்கு தடையாக இருப்பது சட்டம் மட்டும்தான். சந்தன மரத்தைகூட அரசாங்கத்துக்கு மட்டுமேதான் விற்க வேண்டும் என்ற நிலை இருந்து வருகிறது. இந்த சட்டங்களை அரசு நீக்கவேண்டும். கேரளாவைபோல, மரங்களை வெட்டி கொண்டு செல்வதற்கு ஆன்லைனில் அனுமதி பெறும் முறையை அறிமுகப்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.