Mathura Krishna Janmabhoomi case Dismissal of petition seeking removal of mosque | மதுரா கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கு மசூதியை அகற்ற கோரிய மனு தள்ளுபடி

புதுடில்லிகிருஷ்ண ஜென்ம பூமி வழக்கில், ஷாஹி ஈத்கா மசூதியை அகற்றக் கோரிய மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மதுராவில், கடவுள் கிருஷ்ணர் பிறந்ததாகக் கூறப்படும் நிலம் தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது.

சர்ச்சை

இங்குள்ள கிருஷ்ணர் கோவிலை ஒட்டி, ஷாஹி மஸ்ஜித் இத்கா என்ற மசூதி அமைந்துள்ளது. முகலாய ஆட்சியின் போது இங்கிருந்த கோவில் இடிக்கப்பட்டு, அதன் மீது, இந்த மசூதி கட்டப்பட்டு உள்ளதாக நீண்டகாலமாக சர்ச்சை உள்ளது.

கடந்த 1968ல், ஸ்ரீ கிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சன்ஸ்தான் மற்றும் ஷாஹி மஸ்ஜித் இத்கா அறக்கட்டளை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்படி சர்ச்சைக்குரிய நிலத்தில், 10.9 ஏக்கர் நிலம் கோவிலுக்கும், மீதமுள்ள, 2.5 ஏக்கர் நிலம் மசூதிக்கும் பிரிக்கப்பட்டன.

ஆனால், மொத்த பகுதியும் கோவிலுக்கு சொந்தமானது என, ஹிந்துக்கள் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மதுரா நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட 18 வழக்குகள், அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.

இந்நிலையில், மசூதி இடத்தில் தொல்லியல் துறை சார்பில் களஆய்வு செய்யவும், மசூதியை அகற்ற உத்தரவிடக்கோரியும், வழக்கறிஞர் மஹெக் மகேஷ்வரி என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா அடங்கிய அமர்வு விசாரித்த நிலையில், இவ்வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவில், ‘கிருஷ்ண ஜென்ம பூமிக்கு உரிமை கோரி தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு உரிமையியல் வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் மேலும் பல வழக்குகள் வேண்டாம்.

பொதுநல வழக்கு

‘மனுதாரர் பொது நல வழக்காக தாக்கல் செய்துள்ளார். எனவே தான், இந்த மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

‘பொதுநல வழக்காக அல்லாமல் வேறு முறையில் தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். இதன்படி, இந்த மனுவை நாங்கள் நிராகிக்கிறோம்’ எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.