பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சி 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய, தயாராகி வருகிறது. பிரிவு வாரியாக கூட்டம் நடத்தப்படுகிறது.
பெங்களூரு மாநகராட்சி, 2022 – 23ம் ஆண்டு பட்ஜெட்டை, மார்ச் 31ல் இரவு 11:30 மணிக்கு, இணைய தளத்தில் வெளியிட்டது. ரகசிய பட்ஜெட் தாக்கல் செய்ததாக சர்ச்சை எழுந்தது.
கடந்தாண்டு மார்ச் 2ல், டவுன் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில், 2023 -24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அன்றைய நிதிப்பிரிவு சிறப்பு கமிஷனர் ஜெயராம் ராயபுரா தாக்கல் செய்தார். 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலுக்கு, மாநகராட்சி தயாராகி வருகிறது.
இது குறித்து, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
ஆலோசனை
பெங்களூரு மாநகராட்சியின் 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய, தயாராகி வருகிறது. அனைத்து மண்டலங்களின் கமிஷனர்கள், அனைத்து பிரிவுகளின் சிறப்பு கமிஷனர்களுடன், தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் ஆலோசனை நடத்தினார்.
பட்ஜெட் ஏற்பாடு மற்றும் நிதியாண்டின் செலவு, திட்டங்களின் சூழ்நிலை குறித்து தகவல் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
மாநகராட்சியின் அனைத்து பிரிவுகளின் முக்கியஸ்தர்கள், செயல் நிர்வாக பொறியாளர்கள் பட்ஜெட் ஏற்பாட்டை துவக்கி உள்ளனர். ஜனவரி 15க்குள் விபரம் தாக்கல் செய்வர்.
கடந்தாண்டு மண்டல வாரியாக பட்ஜெட் தாக்கல் செய்வதாக, தலைமை கமிஷனர் கூறியிருந்தார்.
ஆனால், சட்டசபை தேர்தல் நடந்ததால், மண்டல வாரியாக பட்ஜெட் தாக்கல் செய்யாமல், வழக்கமான முறையில் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்பு தகவல்
இம்முறை மண்டல வாரியாக பட்ஜெட் தாக்கல் செய்ய, தயாராகி வருகிறோம். மண்டலங்களுக்கு கமிஷனர்கள் நியமிக்கப்பட்டதால், அங்குள்ள பணிகளுக்கு அவர்களே பொறுப்பாளர்களாக இருப்பர்.
அவர்களிடம் திட்டங்கள் தொடர்பான தகவல் பெறப்படும். ஒப்பந்ததாரர்களுக்கு மண்டல வாரியான தலைமை பொறியாளர்கள் பில் தொகை வழங்குகின்றனர். எனவே மண்டல வாரியாக பட்ஜெட் தாக்கல் செய்வது வழக்கம்.
கடந்த முறை டிசம்பரில் இருந்தே, பொது மக்களிடம் தகவல் பெறப்பட்டது. இம்முறை அப்படி செய்யவில்லை. நகர திட்டம், மழைநீர்க் கால்வாய், திடக்கழிவு, ஏரிகள், சாலை வளர்ச்சி உட்பட, முக்கியமான, பெரிய திட்டங்களை செயல்படுத்தும் பிரிவுகளுக்கு, தனித்தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
சொத்து வரி, விளம்பரம் என, மாநகராட்சிக்கு வர வேண்டிய அனைத்து வரிகள், கட்டணம் வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதால், வருமானம் அதிகரிக்கும்.
எனவே, இம்முறை மாநகராட்சி பட்ஜெட்டில், ஒயிட் டாப்பிங், மேம்பாலம் கட்டுவது உள்ளிட்ட பெரிய திட்டங்கள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்