புதுடில்லி, புதுடில்லி அரசு மருத்துவமனைகளுக்கு தரமற்ற மருந்துகள் வினியோகித்ததாக எழுந்த புகார் குறித்து விசாரிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடக்கிறது.
இங்கு அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட பல்வேறு வகையான மருந்துகள் தரமற்று இருந்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து அரசு மருத்துவமனைகளுக்கு வினியோகிக்கப்பட்ட மருந்துகளில், 43 மாதிரிகள் பெறப்பட்டு, அவை தனியார் மற்றும் அரசு ஆய்வகங்களுக்கு பரிசோதனைக்கு அனுப்பபட்டன.
அவற்றில், நுரையீரல் மற்றும் சிறுநீரக பிரச்னைகளுக்கு தரப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகள், வயிற்று புண் ஏற்படாமல் தடுக்கும் மருந்துகள் ஆகியவை தரமற்றவை என தெரியவந்தது.
இதையடுத்து, புதுடில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா, இந்த விவகாரத்தை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என பரிந்துரைத்தார்.
தரமற்ற மருந்துகள் வழங்கப்பட்ட புகாரில், உற்பத்தியாளர் துவங்கி, கொள்முதல் நிறுவனம், மருத்துவமனை வரை முழு வினியோகச் சங்கிலியையும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இதை ஏற்ற மத்திய உள்துறை அமைச்சகம், தரமற்ற மருந்து வினியோக வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க நேற்று உத்தரவிட்டது.
இது பற்றி கருத்து தெரிவித்த புதுடில்லி சுகாதார அமைச்சர் சவுரவ் பரத்வாஜ், “இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை செயலருக்கு தொடர்பு உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement