புதுடில்லி அரபிக்கடலில் சோமாலியா அருகே இந்திய மாலுமிகளுடன் சென்ற சரக்கு கப்பல் கடத்தப்பட்ட சம்பவம், இந்திய கடற்படை வீரர்களின் அதிரடி நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டது. கடற்கொள்ளையர்கள் விரட்டி அடிக்கப்பட்டு, அதிலிருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
:
அரபிக்கடலில் ஆப்ரிக்க நாடான சோமாலியா கடற்பகுதியில், லைபீரியன் நாட்டு கொடியுடன் ‘எம்.வி.லிலா நோர்போல்க்’ என்ற சரக்கு கப்பல் நேற்று முன்தினம் பயணித்தது.
பிரேசில் நாட்டின் டுஅகோ துறைமுகத்தில் இருந்து பஹ்ரைனின் கலிபா பின் சல்மான் துறைமுகம் நோக்கி சென்ற கப்பலில், இந்திய மாலுமிகள் 15 பேர் உட்பட 21 பேர் இருந்தனர்.
சோமாலியாவுக்கு கிழக்கே 300 கடல் மைல் தொலைவில் சென்ற போது, அந்த கப்பலில் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்கள் ஆறு பேர் அதிரடியாக அத்துமீறி நுழைந்தனர்.
பின்னர், அவர்கள் கப்பலை கடத்துவதாக அறிவித்தனர். இது குறித்து அப்பகுதியில் செயல்படும் பிரிட்டனின் கடல் வர்த்தக செயல்பாடுகளைக் கண்காணிக்கும் கண்காணிப்பகத்துக்கு தகவல் அனுப்பப்பட்டது.
குட்டி விமானம்
இதையடுத்து, அரபிக்கடல் பகுதியில் ரோந்து பணியில் இருந்த, நம் கடற்படைக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டு, வீரர்கள் உஷார் படுத்தப்பட்டனர்.
நம் கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்., சென்னை போர்க்கப்பல், கடத்தப்பட்ட கப்பல் சென்ற திசைக்கு திருப்பி விடப்பட்டது.
மேலும் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களும் அங்கு விரைந்தன.
கடத்தப்பட்ட கப்பலை நெருங்கிய நம் கடற்படைக்கு சொந்தமான பி – 81 விமானம் மற்றும் பிரிடேட்டர் எம்.க்யூ., 9பி என்ற ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் அதை தொடர்ந்து கண்காணித்து வந்தன.
சில மணி நேரத்தில் கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலும் லைபீரியா நாட்டு கப்பலை நெருங்கியது. கப்பலில் உள்ள மாலுமிகளை தொடர்பு கொண்ட கடற்படையினர், அவர்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்தனர்.
கப்பலை விட்டு வெளியேறும்படி கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
இதற்கு எந்த பதிலும் வராத நிலையில், அடுத்த சில நிமிடங்களில் கடத்தப்பட்ட கப்பலின் உள்ளே குதித்த நம் கடற்படையின் கமாண்டோ வீரர்கள், கடற்கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். கப்பல் முழுதும் சோதனையிடப்பட்டது.
பல மணி நேர தேடுதலில் யாரும் அங்கு இல்லாததை அடுத்து, கப்பலில் இருந்த 15 இந்திய மாலுமிகளும், ஆறு பிலிப்பைன்ஸ் மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடற்படை வீரர்களின் வருகையை அடுத்து, கடற்கொள்ளையர்கள் தப்பிச் சென்றதால், கடத்தல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
தீவிர முயற்சி
பின் கடற்படை வீரர்களின் உதவியுடன், லைபீரியா நாட்டு கப்பல், அடுத்த துறைமுகத்தை நோக்கி பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து நம் கடற்படையின் செய்தி தொடர்பாளர் விவேக் மத்வால் கூறுகையில், ”கப்பல் கடத்தப்பட்டது தொடர்பான தகவல் வந்ததை தொடர்ந்து, அதை கண்காணிப்பதற்கான தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டன.
”அந்த கப்பலை அடைந்ததும் நம் கமாண்டோ வீரர்கள் அதிரடியாக நுழைந்து, கப்பலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த அதிரடி முயற்சியால் கப்பலில் இருந்த கடற்கொள்ளையர்கள் விரட்டியடிக்கப்பட்டு கடத்தல் முறியடிக்கப்பட்டது,” என்றார்.
சரக்கு கப்பலில் இருந்த மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டதை உறுதி செய்த அந்த கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஸ்டீவ் குன்சர், நம் கடற்படை வீரர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இஸ்ரேல்- – ஹமாஸ் இடையிலான மோதலுக்கு மத்தியில், செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது, ஹவுதி அமைப்பினர் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது, சர்வதேச கடற்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துஉள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்