மோடி குறித்து அவதூறு; டிரெண்டான Boycott ஹேஷ்டேக்; மாலத்தீவு அமைச்சர்கள் சஸ்பெண்ட்! – என்ன நடந்தது?

இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு, பிரதமர் மோடி சமீபத்தில் சென்றுவந்த நிலையில், உலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்றான மாலத்தீவின் அமைச்சர்கள், மோடிக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. முன்னதாக, ஜனவரி 2-ம் தேதியன்று லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி, அங்கு அங்குள்ள சுற்றுலாத் தளங்களைப் பார்வையிட்டார்.

மோடி லட்சத்தீவு பயணம்

அதோடு, லட்சத்தீவு பயணம் குறித்து, “சமீபத்தில், லட்சத்தீவு மக்கள் மத்தியில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், மக்களின் நம்பமுடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னும் பிரமிப்பில் இருக்கிறேன். அகத்தி, பங்காரம், கவரத்தி போன்ற பகுதிகளில் மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

லட்சத்தீவு மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன். மேலும், லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டம் மட்டுமல்ல, காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பர்ய மரபு மற்றும் மக்களுக்கான சான்று அது. என்னுடைய இந்த பயணம், கற்பதற்கும் வளர்வதற்குமான வாய்ப்புள்ளதாக அமைந்திருக்கிறது” என மோடி தனது X சமூக வளைதளப் பக்கத்தில் பதிவிட்டு, சில புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார். மோடி இவ்வாறு சென்றுவந்தது, அங்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதி என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், உலக அளவில் பிரபல சுற்றுலாத் தளமாக விளங்கும் மாலத்தீவு நாட்டின் அமைச்சர் மரியம் ஷியூனா, மோடியை இழிவுபடுத்தும் வகையில் ட்வீட் செய்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. மரியம் ஷியூனாவின் அந்த ட்வீட் தற்போது நீக்கப்பட்டாலும்கூட, அதில் மோடியை இஸ்ரேலின் கைப்பாவை என்று அவர் விமர்சித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

மற்றொரு அமைச்சர் மஹ்சூம் மஜித், இந்தியா மாலத்தீவைக் குறிவைக்கிறது என்றும், மாலத்தீவு கடற்கரை சுற்றுலாத் தலத்துடன் போட்டியிடுவதில் இந்தியா பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது என்றும் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து விமர்சித்திருக்கிறார். மேலும், மற்றுமொரு அமைச்சர் மல்ஷா ஷரீப் என்பவரும் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இந்தியர்கள் பலரும், X சமூக வலைதளப் பக்கத்தில் லட்சத்தீவின் புகைப்படங்களைப் பகிர்ந்து, மாலத்தீவை விட சிறந்த சுற்றுலாத் தளம் எனக் குறிப்பிட்டு, மாலத்தீவைப் புறக்கணிக்குமாறு #Boycott Maldives என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்துவருகின்றனர். இது இரு நாடுகளுக்கிடையிலான பிரச்னையாக வெடித்தது. நடிகர்கள் அக்ஷய் குமார், கங்கனா ரணாவத், முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் போன்றோர் மாலத்தீவு அமைச்சர்களைக் கண்டித்து ட்வீட் செய்தனர்.

மாலத்தீவு அரசின் அறிக்கை

பின்னர் உடனடியாக மாலத்தீவின் முன்னாள் அதிபரும், தற்போதைய சபாநாயகருமான முகமது நஷீத், “மாலத்தீவின் பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு கருவியாக இருக்கும் முக்கிய கூட்டாளியின் தலைவரை நோக்கி, மாலத்தீவு அமைச்சர் மரியம் ஷியூனா பயங்கரமான வார்த்தைப் பிரயோகம் செய்திருக்கிறார். முகமது முய்ஸு (அதிபர்) அரசாங்கம் இந்தக் கருத்துகளிலிருந்து விலகி, அரசாங்கக் கொள்கையை இது பிரதிபலிக்கவில்லை என்று இந்தியாவுக்குத் தெளிவான உறுதிமொழியை அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள்மீது நடவடிக்கை எடுப்பதாக மாலத்தீவு அரசு தெரிவித்தது.

இது குறித்து, மாலத்தீவு அரசு தனது அறிக்கையில், “வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு எதிராக சமூக வளைதளங்களில் தரக்குறைவான கருத்துகள் இருப்பதை மாலத்தீவு அரசாங்கம் கவனித்திருக்கிறது. இந்தக் கருத்துகள் முற்றிலுமாகத் தனிப்பட்டவை. இவை மாலத்தீவு அரசின் கருத்துகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. மேலும், இது போன்ற கீழ்த்தரமான கருத்துகளை வெளியிடுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்க அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தயங்க மாட்டார்கள்” என்று தெரிவித்திருக்கிறது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட அமைச்சர்கள்

இந்த நிலையில் மோடிக்கெதிராக கருத்து தெரிவித்ததற்காக மரியம் ஷியூனா, மஹ்சூம் மஜித், மல்ஷா ஷரீப் ஆகிய அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.