டாக்கா: வங்கதேசத்தில் நடந்த பொதுத் தேர்தலை முக்கிய எதிர்க்கட்சியான, வங்கதேசம் தேசியவாத கட்சி புறக்கணித்த நிலையில், ஓட்டுப் பதிவு மிகவும் மந்தமாகவே நடந்தது. அதே நேரத்தில் ஷேக் ஹசீனா, தொடர்ந்து நான்காவது முறையாக பிரதமராக உள்ளார்.
நம் அண்டை நாடான வங்க தேசத்தில், ஆவாமி லீக் கட்சித் தலைவரான ஷேக் ஹசீனா, பிரதமராக உள்ளார். பார்லிமென்டின், 300 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமரான கலிதா ஜியா, ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். அவர் உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகி, தேர்தலை நேர்மையாக நடத்தும்படி, கலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி வலியுறுத்தியது. அது ஏற்கப்படாததால், தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் நடந்தன.
வேட்பாளர் ஒருவர் இறந்ததால், ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டது. மீதமுள்ள, 299 தொகுதிகளுக்கும் நேற்று தேர்தல் நடந்தது. முக்கிய எதிர்க்கட்சியின் புறக்கணிப்பால், ஓட்டளிப்பதில், வாக்காளர்களுக்கும் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. வன்முறை நடக்கலாம் என்ற பயத்தில், பலர் ஓட்டளிக்கவில்லை.
நேற்று மாலை நிலவரப்படி, இந்தத் தேர்தலில், 40 சதவீத ஓட்டுகள் பதிவானதாக, வங்கதேச தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. கடந்த, 2018 தேர்தலில், 80 சதவீத ஓட்டுகள் பதிவானது. ஒரு சில சம்பவங்களைத் தவிர, ஓட்டுப் பதிவு பெரும்பாலும் அமைதியாக நடந்ததாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
இந்நிலையில், ஷேக் ஹசீனா, தொடர்ந்து நான்காவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, வங்கதேச தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஆளும் ஆவாமி லீக் கட்சி 50 சதவீதத்திற்கும் அதிகமான சீட்களை வென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியம்!’
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதாவது:எதிர்கட்சி புறக்கணிப்பதால், தேர்தல் எப்படி ஏற்றுக் கொள்ளப்படும் என்னும் வெளிநாட்டு ஊடகங்களின் கருத்தை பற்றி எந்த கவலையும் இல்லை. மக்கள் எங்களை ஏற்றுக்கொள்கின்றனரா இல்லையா என்பதே முக்கியம். என் மக்கள் என் பொறுப்பு. மக்களே எங்கள் முக்கிய பலம் என்பதால், தேர்தல் குறித்து யார் எது சொன்னாலும் எங்களுக்கு கவலையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
‘தோல்வி பயத்தால் போட்டியிடவில்லை!’
வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுசாமான் கான் கூறியதாவது: தேர்தலை புறக்கணிக்க பல்வேறு காரணங்களை வங்கதேச தேசிய கட்சியினர் கூறி வருகின்றனர். உண்மையிலேயே, தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தினாலேயே, அவர்கள் போட்டியிட வில்லை. கடந்த 2018 பொது தேர்தலில் அவர்கள் ஒரு சில இடங்களை மட்டுமே வென்றனர். கடந்த 2014ல் தீ வைப்பு தாக்குதலால் மக்களை கொன்றது போலவே இன்றும் அதை செய்து வருகின்றனர். இது போன்ற சித்ரவதை மற்றும் வன்முறையை மக்கள் விரும்பவில்லை. மாறாக, பண்டிகை கால மனநிலையில், அவர்கள் இந்த தேர்தல் திருவிழாவில் பங்கேற்று உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்