கோலார், கர்நாடகாவில், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில், ஆள் சேர்ப்பில் முறைகேடு நடந்த புகாரில், அந்த சங்கத்தின் தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான நஞ்சே கவுடா வீடு, அலுவலகம், கல்குவாரி உட்பட 10 இடங்களில், ஈ.டி., எனப்படும், அமலாக்கத் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது.
கோலார் மாவட்டம், மாலுார் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சே கவுடா, 61. ‘கோமுல்’ எனும் கோலார் – சிக்கபல்லாப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவராகவும் உள்ளார்.
இந்த சங்கத்தில் காலியாக உள்ள, 179 பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு செப்டம்பரில் தேர்வு அறிவிப்பு வெளியானது. கடந்த டிசம்பரில் 179 பணியிடங்களும் நிரப்பப்பட்டதாக, சமூக வலைதளங்களில் பட்டியல் வெளியானது.
தேர்வு நடத்தாமலே, பணம் வாங்கிக் கொண்டு, 179 பேரை பணியில் நியமித்ததாக சங்க தலைவர் நஞ்சே கவுடா, இயக்குனர் அஸ்வத்நாராயணா பாபு, நிர்வாக இயக்குனர் கோபால்மூர்த்தி, நிர்வாக மேலாளர் நாகேஷ் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், நேற்று அதிகாலை 5:30 மணி முதல், மாலுார் அருகே கொம்மனஹள்ளி கிராமத்தில் உள்ள, நஞ்சே கவுடாவின் வீடு, அவரது எம்.எல்.ஏ., அலுவலகம், அவருக்கு சொந்தமான கல்குவாரி, நஞ்சேகவுடாவின் ஆதரவாளர் ஹரிஷ்…
சங்க இயக்குனர் அஸ்வத்நாராயணா பாபு, நிர்வாக இயக்குனர் கோபால்மூர்த்தி, நிர்வாக மேலாளர் நாகேஷ் ஆகியோரின் வீடுகள், கோலார் – சிக்கபல்லாப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகம் என, 10 இடங்களில் அதிரடியாக புகுந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.
நஞ்சே கவுடா வீட்டின் முன், அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர். அங்கு பரபரப்பு ஏற்பட்டதால், போலீசார் குவிக்கப்பட்டனர்.
தேர்வு முறைகேடு, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக, நஞ்சே கவுடா மீது புகார் எழுந்ததால், இந்த சோதனை நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சோதனையில் சிக்கிய சில ஆவணங்களை, அமலாக்கத் துறையினர் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்