Doctor Vikatan: நான் வாரத்தில் ஒரு நாள் விரதம் இருப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். விரதம் இருக்கும் நாள்களில் எனக்கு தலைவலி வருகிறது… சில நாள்களில் அது ரொம்பவே அதிகரிக்கிறது. இதற்கு விரதம் இருப்பதுதான் காரணமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

விரதமிருப்பதற்கு என்னதான் பலன்கள் இருந்தாலும் சிலருக்கு அது ஏற்றதல்ல. அதன்படி நீங்கள் கீழ்க்குறிப்பிட்ட பிரிவுகளில் வருபவர் என்றால் விரதம் இருக்கவே கூடாது.
வளரும் குழந்தைகள் விரதம் இருக்கவே கூடாது. அந்த வயதில் அவர்களுக்கு நிறைய கலோரிகள் தேவைப்படும், விரதமிருப்பதன் மூலம் அது தடைப்படும். அது அவர்களது வளர்ச்சியை பாதிக்கும் என்பதால் குழந்தைகள் விரதமிருப்பதை ஊக்கப்படுத்தாதீர்கள்.
மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி பிரச்னை பலருக்கும் இருக்கும். அவர்கள் விரதம் என்ற பெயரில் சாப்பிடாமல் இருப்பதால் ரத்தச் சர்க்கரை அளவு குறைந்து, அதன் விளைவாக மைக்ரேன் பாதிப்பு இன்னும் அதிகமாகும். எனவே இவர்களுக்கும் விரதம் ஏற்றதல்ல. கர்ப்பிணிகளும் விரதம் இருக்கக்கூடாது.

எதைச் சாப்பிட்டாலும் அசிடிட்டி எனப்படும் அமிலம் எதுக்களிக்கும் பிரச்னையால் சிலர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். பாட்டில் பாட்டிலாக செரிமானத்துக்கான ஆன்டாசிட் மருந்துகள் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இவர்களுக்கும் விரதம் என்பது ஏற்றதல்ல.
ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இல்லாத நீரிழிவு பாதித்தோரும் விரதம் இருக்கவே கூடாது. நீரிழிவு, இதயநோய்கள் உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனையின்றி, உணவு விஷயத்தில் புதிய முயற்சிகள் எதையும் செய்யாமலிருப்பதுதான் சரி. குறிப்பாக, நீரிழிவு பாதித்தோருக்கு விருந்தும் கூடாது, விரதமும்கூடாது என்றே மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.

சராசரியைவிட குறைவான உடல் எடை கொண்டவர்களுக்கும் விரதம் தேவையில்லை. உடல் எடையை அதிகரிக்க வேண்டும், தசைகளின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டும் என்றெல்லாம் நினைப்போருக்கு விரதம் ஏற்புடையதல்ல.
அதே போல அனோரெக்ஸியா என்றோர் உண்ணும் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோரும் விரதம் தவிர்க்கலாம். இது உளவியல் ரீதியான ஒரு பிரச்னை என்பதை உணர்ந்து, அதை சரிசெய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, விரதம் இருக்க முயலவே கூடாது.

விரதம் இருப்பது என முடிவெடுத்தால், அதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து உங்கள் உடல் ஆரோக்கியத்தின் அடிப்படையில் அவர் சொல்லும் விஷயங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். உடல்நலக் கோளாறுகளுடன் விரதமிருக்கும்போது, விரதத்தினால் பலன்கள் கிடைப்பதற்கு பதில் ஆரோக்கிய பிரச்னைகளே அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.