புதுடில்லி, ‘விருதுநகர் மாவட்டம் அச்சன்குளத்தில், 2021ல் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே நிர்ணயித்த அதிகபட்ச நிவாரணத்தை அளிக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த விஷயத்தில் மெத்தனமாக நடந்து கொண்டதாகக் கூறி, தமிழக அரசின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் அச்சன்குளத்தில், 2021, பிப்., 12ல், அங்குள்ள, ‘ஸ்ரீ மாரியம்மாள் பயர்ஒர்க்ஸ்’ என்ற பட்டாசு ஆலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 27 பேர் உயிரிழந்த நிலையில், 26 பேர் காயமடைந்தனர்.
பசுமை தீர்ப்பாயம்
இது தொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து, 2022ல் உத்தரவுகள் பிறப்பித்தது.
இதன்படி, உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு, தலா, 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது.
காயமடைந்தவர்களுக்கு, காயத்தின் தன்மைக்கேற்ப, 2 லட்சம் ரூபாயில் இருந்து, 15 லட்சம் ரூபாய் வரை நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
நிவாரணத் தொகை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை நிறுத்தி வைத்தது. மேலும், மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்தாண்டு மே மாதம், பசுமை தீர்ப்பாயம் மீண்டும் தீர்ப்பு அளித்தது. தன் முந்தைய உத்தரவுகளை அது உறுதி செய்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் அபய் ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வு விசாரித்தது. அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
இது போன்ற பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்பான வழக்குகளில், 2021 ஜூன் மற்றும் 2022 மார்ச் மாதத்தில், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே சில உத்தரவுகள் பிறப்பித்துள்ளது.
இழப்பீடு
அந்த தீர்ப்புகளில், இதுபோன்ற விபத்துகளில் உயிரிழப்போர் குடும்பங்களுக்கு, தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படியே, தேசிய பசுமை தீர்ப்பாயம், விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில், நிவாரணத் தொகையை நிர்ணயித்துள்ளது. இதில் தலையிட நாங்கள் விரும்பவில்லை. அந்தத் தீர்ப்பை உறுதி செய்கிறோம்.
இந்த வழக்கில், தமிழக அரசு மிகவும் மெத்தனமாகவும், மேம்போக்காகவும் செயல்பட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அறிக்கைகள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என, தமிழக அரசு கூறியுள்ளது.
உண்மையிலேயே, நியாயமாக நடந்து கொண்டிருந்தால், அந்த அறிக்கையை கேட்டு, பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு மனு கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால், அவ்வாறு செய்யாமல், மேல்முறையீடு செய்துள்ளது ஏற்புடையதாக தெரியவில்லை.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்