சென்ற 2023ம் ஆண்டு அனிருத்திற்கு ரொம்பவே ஸ்பெஷல். முதன்முறையாக இந்திப் படவுலகில் இசையமைப்பாளராகக் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ஷாரூக்கானின் ‘ஜவான்’ பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழில் ரஜினியின் ‘ஜெயிலர்’, விஜய்யின் ‘லியோ’ என அனியின் இசையில் சென்ற ஆண்டு வெளியான படங்கள் மாபெரும் வசூலையும் குவித்தன. அதைப் போல, இந்தாண்டும் அனிருத்தின் ஆண்டாக இருக்கும் போலிருக்கிறது.
பிஜாய் நம்பியார் இந்தியில் இயக்கிய ‘டேவிட்’ படத்தின் ஒரு பாடலுக்கு இசையமைத்த அனிருத், அதன் பின், ‘ஜெர்ஸி’ படத்திற்குப் பின்னணி இசையமைத்தார். பிறகு தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்தினார். படத்தின் மொத்தப் பாடல்கள், பின்னணி இசை என அவர் இந்தியில் இசையமைத்த முதல் படமாக ‘ஜவான்’ இடம்பெற்றது. இந்தாண்டும் தமிழில் பெரிய படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

கமலின் ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’, ரஜினி, த.செ.ஞானவேலின் ‘வேட்டையன்’, ரஜினி, லோகேஷ் கனகராஜின் ‘தலைவர் 171’, தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவாரா’, அஜித்தின் ‘விடாமுயற்சி’, விக்னேஷ் சிவனின் ‘எல்.ஐ.சி’, தவிர டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும் படத்திற்கும் இசையமைக்கிறார்.
கமலின் ‘விக்ரம்’ படத்திற்குப் பின் அனிருத்தின் கரியர் டாப் கியரில் போயிருக்கிறது. ஷங்கரின் ஃபேவரைட் இசையமைப்பாளர் பட்டியலில் அனிருத் இருக்கிறார். அதை அவரே தனது ‘ஐ’ பட விழாவில் சொல்லியிருப்பதுடன், ‘ஐ’யில் ஒரு பாடலையும் பாட வைத்திருப்பார். அந்தக் கூட்டணிதான் ‘இந்தியன் 2’வில் இணைந்திருக்கிறது. இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகிறது என்பதை முன்பே சொல்லியிருந்தோம். இதற்கிடையே ‘இந்தியன் 2’ ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாவதால், அதன் இசைக்கோர்ப்பு வேலைகளும் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கின்றன.

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவாரா’ கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் இயக்குநர் கொரட்டலா சிவா, இதற்கு முன்னரே ஜூனியர் என்.டி.ஆரின் ‘ஜனதா கேரஜ்’ படத்தை இயக்கியவர். இந்தப் படம் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகிறது. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதால், பின்னணி இசைக்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ரஜினியின் ‘வேட்டையன்’, ‘தலைவர் 171’, அஜித்தின் ‘விடா முயற்சி’, விக்னேஷ் சிவனின் ‘LIC’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நடந்து வருவதால் அதன் பாடல் கம்போஸிங் வேலைகளும் இன்னொரு பக்கம் தீவிரமாக நடக்கவிருக்கின்றன.

தவிர, விஜய் தேவரகொண்டாவின் படம் ஒன்றிற்கும் இசையமைக்கிறார். இதற்கிடையே வரும் பிப்ரவரி 10ம் தேதியன்று துபாயில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். ஆக, இந்தாண்டும் பிஸி ஷெட்யூலில் இருக்கிறார் அனிருத்.