Buffing the hood tomorrow in Erumeli: Makarajyothi darshan preparations in full swing | எருமேலியில் நாளை பேட்டை துள்ளல்: மகரஜோதி தரிசன ஏற்பாடுகள் தீவிரம்

சபரிமலை:சபரிமலையில் மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் நாளை நடக்கிறது. ஜன.15 ஜோதி நாளில் போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜன.16 முதல் ஜன.20 வரை 80 ஆயிரம் பேருக்கு தரிசன முன்பதிவு ஓரிரு நாளில் தொடங்கும்.

எருமேலியில் மண்டல சீசன் தொடக்கம் முதல் பேட்டை துள்ளல் நடைபெற்றாலும், மகரஜோதிக்கு மூன்று நாட்கள் முன்னதாக நடைபெறும் பேட்டை துள்ளல் பிரசித்தி பெற்றது.

அம்பலப்புழா, ஆலங்காடு என இரண்டு பக்தர்கள் குழுவினரின் பேட்டை துள்ளலுக்கு பின் இங்கு பேட்டை துள்ளல் இருக்காது. நாளை மதியம் 12:00 மணியளவில் ஆகாயத்தில் வட்டமிட்டு பறக்கும் கருடனை கண்டதும் அம்பலப்புழா பக்தர்கள் எருமேலி சிறிய சாஸ்தா கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட யானையுடன் பேட்டை துள்ளி வருவர்.

வாவர் பள்ளி வாசலை வலம் வந்த பின்னர் பெரிய சாஸ்தா கோயிலில் நிறைவு செய்து அந்த பக்தர்கள் பெருவழிப்பாதையில் சபரிமலைக்கு பயணத்தை தொடங்குவர்.

மதியம் 3:00 மணிக்கு ஆகாயத்தில் பிரகாசிக்கும் நட்சத்திரத்தை கண்டதும் ஆலங்காடு பக்தர்கள் பேட்டை துள்ளி பெரிய சாஸ்தா கோயிலில் பேட்டையை நிறைவு செய்வர். பின்னர் இவர்களும் பெருவழி பாதையில் பம்பை வந்து சன்னிதானம் வருவர்.

ஆலோசனை

மகரஜோதி நாளில் செய்ய வேண்டிய நடவடிக்கைள் தொடர்பாக பத்தணந்திட்டை கலெக்டர் ஷிபு அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஜோதி தெரியும் இடங்களில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் முந்தைய நாளே அங்கு சென்று குடிநீர், தடுப்புவேலி, ஆம்புலன்ஸ் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால் உடனடியாக பத்தணந்திட்டை கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கும், பேரழிவு நிவாரண தடுப்பு முகாமிலும் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவாபரணம் கடந்து செல்லும் பாதைகளில் ஜன.13, 14ல் மதுக்கடைகள் மூடப்படுகிறது. ஜன.15 மதியம் 12:00 மணி முதல் ளாகாவில் இருந்து தனியார் வாகனங்கள் நிலக்கல் வர அனுமதி கிடையாது. அன்று காலை முதல் ஜோதி தரிசனம் முடிந்து பெரும் பகுதி பக்தர்கள் வெளியேறும் வரை நிலக்கல்லில் இருந்து தனியார் வாகனங்கள் பம்பை செல்ல அனுமதி கிடையாது.

ஜோதி தரிசனம் முடிந்த உடன் பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு செயின் சர்வீஸ் தொடங்கும். அதன் பின்னர் நிலைமைக்கு ஏற்ப வெளியூர்களுக்கான பஸ்கள் புறப்பட்டு செல்லும்.

இதற்காக 1000 பஸ்கள் பம்பை வருகிறது. இந்த பஸ்கள் பம்பை முதல் பிலாந்தோடு வரை உள்ள ரோட்டின் இடது புறமும், பிலாப்பள்ளி முதல் பத்தணந்திட்டை வரை ரோட்டின் இடதுபுறமும், நிலக்கல் பார்க்கிங் கிரவுண்டிலும், பம்பை ஹில்டாப்பிலும் நிறுத்தப்படும்.

கூடுதல் போலீசார்

நிலக்கல்லில் பார்க்கிங் செய்யப்பட்டிருக்கும் தனியார் வாகனங்கள் இரவு 8:00 மணிக்கு பின்னர்தான் வெளியே செல்ல அனுமதிக்கப்படும். பம்பை முதல் நிலக்கல் வரை வாகனங்களை ஒழுங்கு படுத்த கூடுதல் போலீசார் வருகின்றனர்.

ஜோதி நாளில் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாக நேற்று சன்னிதானத்தில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

மகரஜோதிக்கு பின்னர் ஜன.16 முதல் ஜன.20 வரை தரிசனத்திற்கான ஐந்து நாட்களுக்கான ஆன்லைன் முன்பதிவு ஓரிரு நாளில் தொடங்கும். இந்த நாட்களில் தினசரி 80 ஆயிரம் பக்தர்களுக்கு முன்பதிவு அனுமதி வழங்கப்படும் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. எனினும் எந்த இடங்களிலும் ஸ்பாட் புக்கிங் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.