புதுடெல்லி: அடுத்த ஒரு மாதத்தில் உத்தரப் பிரதேசத்தில் மேலும் 5 விமான நிலையங்கள் திறக்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் இருந்து குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு இன்று விமான சேவை தொடங்கப்பட்டது. இதனை காணொலி வாயிலாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் காணொலி வாயிலாக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, “உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஒரு மாதத்தில் மேலும் 5 விமான நிலையங்கள் செயல்படத் தொடங்கும். இதன் மூலம், இம்மாநிலத்தில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரிக்கும். ஆசம்கர், அலிகர், மொரதாபாத், சித்ரகூட், ஷ்ரவஸ்தி ஆகிய நகரங்களில் இந்த விமான நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.
அயோத்தியில் இருந்து டெல்லிக்கான விமான சேவையை இண்டிகோ விமான நிறுவனம் இன்று தொடங்கி உள்ளது. மேலும், அயோத்தியா – அகமதாபாத் விமான சேவையையும் அந்நிறுவனம் தொடங்கி உள்ளது. அடுத்ததாக, அயோத்தியா – மும்பை இடையேயான விமான சேவை வரும் 15ம் தேதி தொடங்கப்படும். மிகப் பெரிய விமானங்கள், சர்வதேச விமானங்கள் தரையிறங்குவதற்கு ஏற்ப அயோத்தி விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவுபடுத்தப்படும்.
கடந்த 9 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தின் விமான சேவை மிகப் பெரிய அளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 2014-ல் உத்தரப் பிரதேசத்தில் வாரத்திற்கு 700 விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த எண்ணிக்கை தற்போது 1,654 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யாநாத், “ராமர் கோயில் கும்பாபிஷேகத்தன்று அயோத்திக்கு 100 விமானங்கள் வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமான சேவை மேம்படுத்தப்படுவதால் மாநிலத்தின் சுற்றுலாவும் வர்த்தகமும் பெருகும். உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2016-17 நிதி ஆண்டில் விமானத்தில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 59.97 லட்சமாக இருந்தது. அது தற்போது 30 சதவீதம் உயர்ந்து, 96.02 லட்சமாக அதிகரித்துள்ளது. மக்கள் அதிக அளவில் வருகைத் தரக்கூடிய நகரமாக அயோத்தி மாற இருப்பதால், இதை கருத்தில் கொண்டு சாலை, ரயில், விமான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது அயோத்தி விமான நிலையம் ஒரு நேரத்தில் அதிகபட்சம் 600 பயணிகளை கையாளும் திறன் கொண்டிருக்கிறது. விமான நிலைய விரிவாக்கப் பணி நிறைவடைந்ததும் இந்த எண்ணிக்கை 3 ஆயிரமாக உயரும். தற்போது 2,200 மீட்டர் நீளம் கொண்டதாக ஓடுபாதை உள்ளது. இது 3,700 மீட்டர் நீளத்துக்கு நீட்டிக்கப்படும். இதன்மூலம், மிகப் பெரிய விமானங்கள், சர்வதேச விமானங்கள் தரையிறங்க முடியும்” என தெரிவித்தார்.