விசாகப்பட்டினம்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிலையில் நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாணை அண்மையில் சந்தித்திருந்தார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் அரசியல் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டு இயங்கும் வகையில் ராயுடுவின் செயல்பாடு இருந்தது. அந்த வகையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், ஒரே வாரத்தில் கட்சியில் இருந்து விலகினார். துபாயில் நடைபெற உள்ள ஐஎல்டி20 தொடரில் மும்பை அணிக்காக விளையாட உள்ளதாகவும் அதற்கு விளக்கம் கொடுத்தார். இருந்தும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதாக அறிவித்த அடுத்த சில நாட்களில் பவன் கல்யாணை அவர் சந்தித்தார்.
“ஆந்திர மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் அரசியலுக்கு வந்தேன். அதன் காரணமாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, அதன் மூலம் எனது நோக்கத்தை நிஜமாக்க முடியும் என நம்பினேன். களத்தில் இறங்கி கிராம மக்களை சந்தித்து பேசினேன். அவர்களின் பிரச்சினைகளைப் அறிந்து கொண்டேன். சில காரணங்களுக்காவும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட்டு எனது நோக்கத்தை எட்ட முடியுமா என்ற சந்தேகமும் வந்தது. இதில் யாரையும் நான் குறை சொல்லவில்லை. எனது சித்தாந்தமும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தமும் ஒற்றை புள்ளியில் இணையவில்லை. தேர்தலில் போட்டியிடுவது இதில் அறவே இல்லை. அதனால் அரசியலில் இருந்து விலக நான் முடிவு செய்துள்ளேன்.
இருந்தும் எனது முடிவை அறிந்த எனது நலம் விரும்பிகள் அதற்கு முன்னதாக பவன் அண்ணாவை சந்திக்குமாறு கேட்டுக் கொண்டனர். நான் பவன் அண்ணாவை சந்தித்து அரசியல் மற்றும் வாழ்க்கை குறித்து விரிவாக பேசினேன். அதன் மூலம் அவரை புரிந்து கொண்டேன். எங்கள் இருவரது பார்வையும் ஒன்றாக உள்ளது. அவருடைய சித்தாந்தமும் என்னுடையதைப் போலவே உள்ளது. அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. எனது தொழில்முறை கிரிக்கெட் கமிட்மெண்ட் காரணமாக துபாய் செல்கிறேன். ஆந்திர மக்களுக்காக எப்போதும் நான் இருப்பேன்” என ராயுடு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த பதிவை பலரும் பல்வேறு வகையில் விமர்சித்து வருகின்றனர். சரியான வீரர் சரியான அணியில் இணைந்துள்ளார் என வரவேற்பும், ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை அணியில் இருந்து சென்னை அணிக்கு மாறுவது போல செயல்படுகிறார் எனவும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
— ATR (@RayuduAmbati) January 10, 2024