சமீபகாலமாக கல்விப்பணிக்காக அல்லாமல் சர்ச்சைகளுக்காக மட்டுமே… சேலம் பெரியார் பல்கலையின் பெயர் ஊடகங்களில் அடிபட ஆரம்பித்திருக்கிறது. ‘தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது?’ என்று செமஸ்டர் தேர்வில் கேள்வி கேட்டது, பட்டமளிப்பு விழாவுக்கு கறுப்பு மற்றும் அதுசார்ந்த நிற உடைகளை அணியத் தடைவிதித்தது, பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டை கடைபிடிக்காதது, பெரியார் தொடர்பான நூல்களை வெளியிட்டதற்காக பேராசிரியர் ஒருவருக்கு மெமோ அனுப்பியது என்று தொடர் சர்ச்சைகள் ஏற்பட்டன. இத்தனைக்கும் காரணம் அதன் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன்தான் என பெரியாரிய அமைப்புகளும், பா.ம.க., வி.சி.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நேரத்தில், பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டே, அதற்குப் போட்டியாக புதிய கல்வி நிறுவனத்தை தொடங்கியதாக துணைவேந்தர் ஜெகநாதன்மீது குற்றச்சாட்டு கிளம்பியது. இது தொடர்பாக பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் கௌரவத் தலைவர் இளங்கோவன், சமீபத்தில் சேலம் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதில், “துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டவர்கள் சட்டத்துக்குப் புறம்பாக `புட்டர்’ எனும் (PUTER – Periyar University Technology Entrepreneurship and Research Foundation) அறக்கட்டளை நிறுவனத்தைத் தொடங்கி, மோசடி செய்திருக்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, மோசடி, கூட்டுச்சதி, கொலை மிரட்டல், சாதி வன்கொடுமை, ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிந்து, கடந்த டிசம்பர் 26-ம் தேதியன்று துணைவேந்தர் ஜெகநாதனைக் கைதுசெய்தனர். ஆனால், அடுத்த நாளே அவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.
இந்நிலையில் தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி, மருத்துவ சிகிச்சை பெற்றுவந்தார். இதனிடையே மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி உத்தரவின்பேரில் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் வீடு, அலுவலகம், மேலும் குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் துணைவேந்தர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஒருபக்கம் கண்டனத்தை தெரிவிக்க, மற்றொருபுறம் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “துணைவேந்தர் மீது வேண்டுமென்றே பொய் காரணங்களைக் கூறி வழக்கு பதிவுசெய்துள்ளனர் சேலம் காவல் துறையினர்.

இது அனைத்திற்கும் பின்னால் அமைச்சர் பொன்முடிதான் இருந்து வருகிறார். இதற்கு தமிழக அரசும், காவல்துறையினரும் தக்க பதில் சொல்ல வேண்டும்” என்று கூறினார். மேற்கண்ட பிரச்னை கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில், கோவைக்குச் செல்லவிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, திடீரென சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்து, துணைவேந்தர் ஜெகநாதனைச் சந்தித்துவிட்டு சென்றுள்ளார்.

ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தி.மு.க, வி.சி.க, தி.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோர், கறுப்புக்கொடி காட்ட வந்தனர். அவர்களை போலீஸார் கைதுசெய்து, மாலையில் விடுவித்தனர்.