துபாய், ஈராக்கில் இருந்து துருக்கிக்கு கச்சா எண்ணெய் ஏற்றி சென்ற சரக்கு கப்பல், ராணுவ உடை அணிந்த அடையாளம் தெரியாத நபர்களால், ஓமன் வளைகுடாவில் வைத்து நேற்று கடத்தப்பட்டதாக, பிரிட்டன் ராணுவ ஆலோசனை குழு எச்சரித்துள்ளது.
மேற்காசிய நாடான ஈராக்கின் பஸ்ரா நகரத்தில் இருந்து, துருக்கியின் அலியாகாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு, செயின்ட் நிகோலஸ் என்ற சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது.
மத்திய கிழக்கு கடல் பகுதியில் உள்ள ஓமன் வளைகுடாவை நேற்று கடந்து செல்கையில், ராணுவ உடையுடன் முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத ஆறு மர்ம நபர்கள் கப்பலில் ஏறினர்.
இவர்கள் கப்பலில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை மறைத்தனர். அதன் பின் கப்பலில் இருந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸ் நாட்டைச் சேர்ந்த, ‘எம்பயர் நேவிகேஷன்’ என்ற நிறுவனத்துக்கு சொந்தமான இந்த கப்பல், ‘சுயஸ் ராஜன்’ என, முன்னர் அழைக்கப்பட்டது.
ஈரானில் இருந்து எண்ணெய் ஏற்றி வந்தபோது, இந்த கப்பலை அமெரிக்க ராணுவம் கடத்திச் சென்ற சம்பவத்தை தொடர்ந்து இந்த கப்பலின் பெயர் பரவலாக அடிபடத் துவங்கியது.
தற்போது செயின்ட் நிகோலஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த கப்பலை, ஈரான் கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துஉள்ளது. இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை.
செங்கடல் பகுதியில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரங்களில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறி உள்ளது.
இதையடுத்து, இந்த பதிலடியில் அமெரிக்கா ஈடுபட்டு இருக்கக் கூடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement