மூணாறு:மூணாறில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கையில் அரசு மனப்பூர்வமாக செயல்படவில்லை என கேரள உயர் நீதிமன்றம் விமர்சித்தது.
மூணாறு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி திருச்சூரைச் சேர்ந்த ‘ஒன் எர்த் ஒன் லைப்’ எனும் தனியார் அமைப்பினர் தொடர்ந்த பொதுநல வழக்கை நீதிபதிகள் முகம்மது முஸ்தாக், ஷோபாஅன்னம்மாஈப்பன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரிக்கிறது. இவ்வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது மூணாறில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கைகளில் அரசு மனபூர்வமாக செயல்படவில்லை என நீதிபதிகள் விமர்சித்தனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு வருவாய்த்துறை முதன்மை செயலாளர் தலைமையில் வருவாய் கமிஷனர் (நிலம்), பேரிடர் நிவாரண கமிஷனர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட உயர் மட்ட குழுவை அமைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவுகளை கூட நடைமுறைப்படுத்துவதில்லை என்பதையும் சுட்டிகாட்டினர்.
உயர்மட்ட குழு ஜன.,31 முன் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். மூணாறில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு சிறப்பு தாசில்தாருக்கு வாகனம், தேவையான ஊழியர்கள் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும். இடுக்கி மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு, போலி ஆவணங்கள் குறித்து உயர் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்து 20 ஆண்டுகளை கடந்தும் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு தேவையான அதிகாரிகளை கூட நியமிக்காத நிலையில் அரசு கால அவகாசம் கேட்கிறது. 1964ல் பொது நலத்துடன் கொண்டு வரப்பட்ட நிலம் பதிவு சட்டம், 1971ல் திருத்தம் செய்தபோது ஆக்கிரமிப்பாளர்கள் பயனடைந்தனர். அதனால் சட்டத்தின் விதிமுறைகள் குறித்து ஆய்வு நடத்த தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் பரிந்துரைந்தனர். அது தொடர்பாக அட்வகேட் ஜெனரலை நேரடியாக ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement