அமெரிக்கா தலைமையில் உருவான நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைவதை எதிர்த்த ரஷ்யா, கடுமையாக எதிர்வினையாற்றியது. அதைத் தொடர்ந்தே ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி இன்றளவும் நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு நேட்டோவில் ஸ்வீடன் நாடு இணைந்ததற்குத் தீவிரமான எதிர்வினைகள் எதிர்பார்க்கப்பட்டது. உக்ரைனில் நடந்து வரும் ரஷ்ய ஆக்கிரமிப்புகளையும் கவனத்தில் கொண்ட ஸ்வீடன், போர் சூழலை எதிர்கொள்ளும் எனக் கருதுகிறது.

அதை உறுதி செய்யும் விதமாகக் கடந்த வார இறுதியில் சாலனில் நடைபெற்ற ஸ்வீடனின் வருடாந்திர சமூகம் மற்றும் பாதுகாப்பு (‘ஃபோக் ஓச் ஃபோர்ஸ்வர்’) மாநாட்டில் பேசிய சிவில் பாதுகாப்பு அமைச்சர் கார்ல்-ஆஸ்கர் பொஹ்லின் (Carl-Oskar Bohlin), “ஏறக்குறைய 210 ஆண்டுகள் அமைதியைத் தோழனாகக் கொண்டிருக்கும் ஸ்வீடன் தேசம் போரை எதிர்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. 1814-ல் அண்டை நாடானா நோர்வேயுடன் ஒரு போரை எதிர்கொண்டது.
அதன் பிறகு ஸ்வீடன் ஆயுதமேந்திய தாக்குதலில் ஈடுபடவில்லை. இரண்டாம் உலகப் போரின்போதுகூட நடுநிலையாக இருந்தது. ஆனால், தற்போதைய சூழலைக் கவனத்தில் கொண்டால், ஸ்வீடனில் போர் நடக்கலாம்… இரண்டாம் உலகப் போரின் முடிவிலிருந்து, எந்த நேரத்திலும் இல்லாத அளவுக்கு அதிக ஆபத்தான கண்ணோட்டத்தை உலகம் தற்போது எதிர்கொள்கிறது.

எனவே, ஒருவேளை போர் வந்தால், ஆயுதம் ஏந்துவதற்குத் தன்னார்வ பாதுகாப்பு அமைப்புகளில் சேருமாறு குடிமக்களை வலியுறுத்துகிறேன். இது போன்ற சமயங்களில்தான் நீங்கள் யார்… உங்களின் பலம் என்ன என்பதை அறிந்துகொள்வீர்கள். நீங்கள் தனிப்பட்ட நபரா? தன்னார்வ பாதுகாப்பு அமைப்பில் சேர உங்களுக்கு நேரம் இருக்கிறதா? என்று யோசிக்காதீர்கள். எதற்கும் தயாராக இருங்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.